(செ.தேன்மொழி)

மாவீரர் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்குமாறு கூறி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுக்களை யாழ் மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் தெளிவுபடுத்தி ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் அதில் மேலும் கூறியிருப்பதாவது :

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த உயிரிழந்த போராளிகளின் நினைவேந்தலுக்கு அனுமதி வழங்குமாறு கோரி யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு மேன்முறையீட்டு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளை தடுப்பதற்காக சுகாதார பிரிவினரும் பொலிஸாரும் முயற்சித்து வருவதாகவும், எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் அதனை நடத்துவதற்கு அனுமதி வழங்குமாறும் குறிப்பட்டே இந்த மேன்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிஸ்டர் ஜெனரல் சுமதி தர்மார்தன், பிரதி சொலிஸ்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தரம் மற்றும் சிரேஷ்ட அரச சட்டதரணி சஹிரா பாரிக் ஆகியோர் மன்றில் முன்னிலையாகியிருந்ததுடன், அவர்கள் அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கமைய இது போன்ற தீர்ப்புகளை வழங்குவதால் நீதிமன்றத்தின் அதிகாரம் தொடர்பில் சிக்கல் நிலைமைத் தோற்றம் பெரும் என்று மன்றில் அறிவித்தனர்.