சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களுக்கு எதிராக, சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘அகடு’ என்ற பெயரில் திரைப்படமொன்று தயாராகிறது.

அறிமுக இயக்குநர் எஸ் சுரேஷ்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் அகடு. இந்த படத்தில்  நடிகர்கள் ஜோன் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சாம்ராட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜோகன் இசையமைத்திருக்கிறார். சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல் ராஜு தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,‘ கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலத்திற்கு சுற்றுலா செல்லும் நான்கு இளைஞர்கள், அங்கு சுற்றுலா பயணியாக வருகைத்தந்த பதிமூன்று வயது சிறுமிக்கு எதிரான ஒரு குற்றச்செயலில் ஈடுபடுகிறார்கள். 

அந்த சம்பவம் என்ன? அதனைத் தொடர்ந்து என்ன நடைபெறுகிறது? என்பதை பரபரப்புடன் விவரிக்கும் கதை தான் அகடு. இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்திருக்கிறது. அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.’ என்றார்.