உலக அளவில் 5 இலட்சம் குழந்தைகளுக்கு ஏஞ்சல்மேன் சின்ட்றோம் எனப்படும் அரிய பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்பிற்கு தற்போது பிசிகல் தெரபி மற்றும் ஓக்குபேஷனல் தெரபி போன்ற சிகிச்சைகள் அறிமுகமாகி நல்ல பலனை வழங்கி வருகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலக அளவில் பிறக்கும் பதினையாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏஞ்சல்மேன் சிண்ட்ரோம் எனப்படும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியை தாமதப்படுத்தும் நோய்க்குறி என்னும் பாதிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் ஒட்டிசம் மற்றும் செரிபரல் பால்சி போன்ற பாதிப்பின் அறிகுறிகளைப் போல் இருந்தாலும், இவை சற்று வித்தியாசமானவை. 

குழந்தைகள் பேசுவதில் தாமதம் ஏற்படுவது, குழந்தைகள் தவழ்ந்து சென்று சுவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதிலும் உறுதியற்ற நிலை ஏற்படுவது, சில குழந்தைகள் ஊர்ந்து செல்வதிலும் தாமதம் ஏற்படுவது, ஏதேனும் பொருட்களை பிடித்து கொண்டு நிற்பதிலும் தடை ஏற்படுவது, தாய்ப்பால் அருந்துவதிலும் இடையூறு ஏற்படுவது.. போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கும் இத்தகைய பாதிப்பு பெற்றோர்களை கவலை கொள்ளச் செய்யும்.

இத்தகைய பாதிப்புள்ள குழந்தைகளின் தலை அளவில் சிறியதாகவும், கை மற்றும் கால்களை அசைப்பதில் சமச்சீரின்மையும் காணப்படும். பாரம்பரிய மரபணு குறைபாடுகள் காரணமாக இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் இத்தகைய பாதிப்பிற்கு தற்போது சிகிச்சை கண்டறியப்பட்டிருக்கிறது.

பெற்றோரின் அரவணைப்பு மற்றும் கண்காணிப்புடன் பிரத்தியேக பயிற்சிபெற்ற மருத்துவ நிபுணர்கள் வழங்கும் பிசிகல் தெரபி மற்றும் ஒக்குபேஷனல் தெரபி மூலம் இதற்கான முழுமையான நிவாரணம் வழங்கி, அவர்களை மூன்று வயதிற்குள் இயல்பான குழந்தைகளைப் போல் இயங்கவும், வளர்ச்சியை நோக்கி பயணிக்க வைக்கவும் இயலும்.

டொக்டர் சதீஷ்குமார்.

தொகுப்பு அனுஷா.