( எம்.எப்.எம்.பஸீர்) 

முன்னாள் ஜனாதிபதி செயலரும் தற்போதைய பிரதமரின் ஆலோசகருமான லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்  ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர்  நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோர் சில் துணி (பெளத்தர்கள் மத அனுட்டாங்களின் போது அணியும் வௌ்ளைத் துணி) விநியோக மோசடி வழக்கிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர்.  

குறித்த இருவரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் சட்டக் கோவையின் 331(1) ஆம் அத்தியாயத்துக்கு அமைய மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த, சி.ஏ. 413 ௪14/ 2017 எனும் மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் பின்னரேயே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  குமுதினி விக்ரமசிங்க மற்றும் தேவிகா அபேரத்ன உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது. நீதிபதி குமுதினி விக்ரமசிங்க  62  பக்கங்கள் உடைய இந்த தீர்ப்பினை அறிவித்ததுடன், அந்த தீர்ப்புக்கு இணங்குவதாக நீதிபதி  தேவிகா அபேரத்ன கையொப்பமிட்டுள்ளார்.

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கு சொந்தமான 600 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதியை செலவிட்டு சில் துணி விநியோகிக்கப்பட்டமை உள்ளிட்ட 03 குற்றச்சாட்டுகளின் கீழ் மேல் நீதிமன்றத்தினால் அனுஷ பெல்பிட்ட, லலித் வீரதுங்க ஆகிய  இருவரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு 8026/2015 எனும் இலக்கத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்ப்ட்டது.

அவ்வழக்கு விசாரணைகளின் இறுதியில்  முதலாம் பிரதிவாதி அனுஷ பெல்பிட்ட , 2 ஆம் பிரதிவாதி லலித் வீரதுங்க ஆகியோரை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க குற்றவாளிகளாக அறிவித்தார். 

இதன்போது, பிரதிவாதிகளுக்கு தலா 03 வருட கடூழிய சிறைத்தண்டனையும் தலா 20 இலட்சம் ரூபாஅபராதமும் விதிக்கப்பட்ட நிலையில்,  தலா 500 இலட்சம் ரூபா  நட்ட ஈடு செலுத்தவும் உத்தரவிடப்ப்ட்டது.

 இந் நிலையிலேயே தமக்கு தண்டனை விதிக்கப்பட்ட முறைமை தவறானது எனவும் தாங்களை விடுதலை செய்யுமாரும் கோரி,  அனுஷ பெல்பிட்டவும், லலித் வீரதுங்கவும் மேன் முறையீட்டு நீதிமன்றில் மேன் முறையீடு செய்தனர். அந்த மேன் முறையீட்டின் பலனாக அவ்விருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், மேன் முறையீட்டு விசாரணைகள் தொடர்ந்தன.

குமுதினி விக்ரமசிங்க, தேவிகா அபேரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் மேன் முறையீட்டு விசாரணைகள் கடந்த 2020 ஜூலை 23,29 ஆம் திகதிகளிலும், ஆகஸ்ட் 24 ஆம் திகதியும், செப்டம்பர் 2,4,10,16,24,30 ஆம் திகதிகளிலும் ஒக்டோபர் 6 ஆம் திகதியும்  இடம்பெற்றதுடன் அத்தினங்களில் இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்ப்ட்டிருந்தன.

 கடந்த 2019 ஜனவரி 3 ஆம் திகதி லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட்ட சார்பில்  எழுத்து மூல சமர்ப்பணங்களும், 2019 பெப்ரவரி 6 ஆம் திகதி சட்ட மா அதிபர் சார்பிலும்  எழுத்து மூல சமரொப்பணங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் மேலதிக எழுத்து மூல சமர்ப்பணங்கள்  கடந்த 2020 ஒக்டோபர் 27 ஆம் திகதி சகல தரப்பினராலும் மின்னஞ்சல் ஊடாக முன்வைக்கப்பட்டிருந்தன.

  இந்த மேன் முறையீட்டு  விசாரணைகளின் போது, அனுஷ பெல்பிட்ட சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி காஞ்சன ரத்வத்த, ஜனக ரணதுங்க,  அமானி பிலபிட்டிய உள்ளிட்டோர் ஆஜராகி வாதாடினர்.

 லலித் வீரதுங்க சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, சவீந்ர பெர்ணான்டோ, பைசர் முஸ்தபா உள்ளிட்டோர்  வாதங்களை முன்வைத்திருந்தனர்.

சட்ட மா அதிபர் சார்பில்  பிரதி சொலிசிட்டர் ஜெனரால்  துஷித் முதலிகே,  சிரேஷ்ட அரச சட்டவாதி சத்துரி விஜேசிங்க அகியோர் அஜராகினர்.

 இந் நிலையில் நேற்றைய தினம், இந்த மேன் முறையீட்டு நீதிமன்றின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பை நீதிபதி குமுதினி விக்ரமசிங்க வாசித்தார்.

 இதன்போது,

சட்ட மா அதிபர் மற்றும், மேன் முறையீட்டு மனுதாரர் தரப்புக்கள் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் பூரணமாக ஆராய்ந்த பின்னர் இந்த தீர்ப்பை வழங்குவதாக நீதிபதி குமுதினி விக்ரமசிங்க அறிவித்தார்.

 அதன்படி,  மேல் நீதிமன்ரினால் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவரும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் என்ற ரீதியில், அவர்கள்  நேரடியாகவோ மறைமுகமாகவோ அரச பண மோசடியில் ஈடுபட்டதாக எந்த சாட்சியங்களையும் காண முடியவில்லை என  சுட்டிக்காட்டினார்.

 அதனால்,  மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட 3 குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனவும் அதனால் குறித்த இருவரையும் முழுமையாக விடுவிப்பதாகவும் நீதிபதி குமுதினி விக்ரமசிங்க அறிவித்தார். அந்த தீர்ப்புடன் நீதிபதி தேவிகா அபேரத்னவும் இணங்கினார்.

இதனையடுத்து குறித்த வழக்குத் தீர்ப்பு மேலதிக நடவடிக்கைகளுக்காக கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டது.