ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத் திட்டம் ஆகியவற்றை ஒழுங்கு செய்த தலைவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மாவனெல்ல நீதிவான் என்.கே.மஹிந்த இன்று உத்தரவிட்டுள்ளார். 

மாவனெல்ல பொலிஸார் முன்வைத்த மனுவொன்றை ஆராய்ந்த பின்பே நீதிவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். 

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நாளை அரசுக்கு எதிராக பாதயாத்திரையொன்றை மேற்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு இடைக்காலத் தடை விதித்து கண்டி நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதேவேளை, மஹிந்தானந்த அளுத்கமகே, திலும் அமுணுகம, கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் லோஹான் ரத்வத்த ஆகியோர்  நாளை கண்டியில் ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரையில் பங்கேற்பதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை  மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்காமலிருக்க மாவனெல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள அதேவேளை, பாதயாத்திரை மாவனெல்ல நகரைக்கடக்க மாற்றுப்பாதையை உபயோகிக்குமாறும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.