ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த வைத்தியரான கவ்லா அல் ரோமைதி என்ற பெண் ஏழு கண்டங்களுக்கும் 3 நாட்கள் 14 மணிநேரம் 46 நிமிடம் 48 வினாடிகளில் வேகமாகப் பயணித்து கின்னஸ் சாதனையை செய்துள்ளார். 

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பெப்ப்ரவரி 13, 2020 அன்று அவரது சாதனை படைத்த பயணம் முடிவடைந்தது.

இந்த சிறப்புவாய்ந்த பயணத்தின்போது, அல் ரோமைதி 208 நாடுகளையும், அதன் சார்பு பகுதிகளையும் பார்வையிட்டுள்ளார்.

"ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுமார் 200 வெவ்வேறு தேசிய இனங்களைக் கொண்டுள்ளது, நான் அவர்களின் நாடுகளுக்குச் சென்று அவர்களின் கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளைப் பற்றி அறிய விரும்பினேன்," என்று அல்ரோமைதி கூறியுள்ளார்.

மேலும் "இது ஒரு கடினமான பயணம், குறிப்பாக விமான நிலையங்களில் நிறைய பொறுமையுடன் இருக்கவேண்டும். பலத்தரப்பட்ட விமான பயணங்களையும் சமாளிக்க வேண்டியிருந்தது. கின்னஸ் உலக சாதனை பட்டத்தை அடைவது எனக்கும் எனது சமூகத்திற்கும் கிடைத்த முழுமையான மரியாதை” என தெரிவித்துள்ளார்.

"எனது சாதனை உள்நாட்டிலும் உலகெங்கிலும் பலருக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன். வாழ்க்கையில் தங்கள் குறிக்கோள்களை நிறைவேற்ற ஒரு வழியைக் கண்டுபிடிக்க அனைவரையும் ஊக்குவிக்கிறேன், எதுவும் சாத்தியம்!" என தெரிவித்துள்ளார்.