அரசின் புதிய வரவு - செலவுத் திட்டமானது பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 

கடந்த 5 வருட காலமாக நாளாந்த சம்பளமாக ரூபா 1000 வழங்கப்பட வேண்டும் என்று போராடி வந்தனர்.

எனினும், அது நிறைவேறவில்லை. இந்த நிலையில் தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் என பலதரப்பட்டவர்களும்  பல்வேறுவாக்குறுதிகளை அவர்களுக்கு வழங்கி வந்தனர்.

இந்தநிலையில் அமரர் ஆறுமுகன் தொண்டமான் தான் எப்படியாவது 1000 ரூபா சம்பளத்தை பெற்று தருவதாக கூறி கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். எனினும் துரதிஷ்டவசமாக அவர்  உயிர் இழந்தாலும் கூட அவரது கனவு இன்று நனவாகி உள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது வரவு - செலவுத் திட்ட உரையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் என்று முன்மொழிந்துள்ளதுடன் அதனை வழங்கத் தவறும் கம்பெனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இச்செய்தி மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த குளிர், வெயில், மழை என்று எதனையும் பார்க்காது உழைக்கும் அப்பாவித்தோட்டத் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் சம்பளம் அவர்களுக்கு இரண்டு வேளை உணவுக்குக்கூட போதுமானதல்ல. 

எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக தம்மையே தியாகம் செய்யும் மக்கள் ஒரு பத்து ரூபா சம்பள உயர்வுக்குக்கூட வருடக் கணக்கில் போராட்டம் நடத்தவேண்டிய நிலைமையே வரலாறாக தொடர்கிறது.

அந்த வகையில் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு என்பது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். 

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்  அவர்களுக்கு இந்த தொகை கிடைத்துள்ளது வரவேற்கதக்கது.

வெறுமனே மலையக மக்களுக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் ஒரு சில அரசியல்வாதிகளும் தொழிற்சங்கங்களும் இன்றும் கூட அப்பாவி மக்களின் பிரச்சினைகளை விற்று, பிழைப்பு நடத்தி வருவது மாத்திரமன்றி மக்களை தவறாக வழிநடத்தவும் முனைகின்றனர்.

எப்படியாவது இந்த கொடுப்பனவை அவர்களுக்கு பெற்று கொடுக்க முன் வருவதை விடுத்து, அரசின் மீதும் வரவு - செலவு திட்டம் மீதும் குறை கூறுவதில் எந்தவித பயனும் இல்லை.

அவர்களால் முடியாது போனதை மூடி மறைக்கவே புதிய நியாயங்களையும் கற்பிக்கின்றனர். 

வரவு - செலவுத் திட்ட வரலாற்றில் மலையக மக்களின் சம்பள உயர்வு தொடர்பில் பேசப்பட்டது இதுவே முதல் தடவை என்ற வகையில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவை பாராட்டாமல் இருக்கமுடியாது.

கடந்த தேர்தலில் மக்கள் மத்தியில் அவர் இந்த வாக்குறுதி வழங்கியிருந்தார். அதேபோன்று  அதனை பெற்றுக்கொடுக்க அவர் உதவுவார் என நம்பலாம்.

ஒரு சில அரசியல்வாதிகள்  தங்களின் நோக்கங்களுக்காக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முனைகின்றனர். 

இவ்வாறு முதலைக்கண்ணீர் வடிக்கும் அரசியல்வாதிகள் குறித்து மக்கள் விழிப்பாக இருப்பது அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்