(நா.தனுஜா)

வரவு - செலவுத்திட்டத்தில் பொய்யான விடயங்களைக் கூறுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாமனைவரும் அறிந்திருக்கின்றோம். 

எனினும், அதனை மக்கள் தெரிந்துகொள்ளும்போது எமது நாடு மீண்டெழ முடியாத நிலையை அடைந்திருக்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரசாங்கத்தின் இலக்குகள் சிறந்தவையாகவே இருக்கின்றன.

எனினும், அவற்றை செயற்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பொருத்தமான செயற்திட்டங்களும் அதற்காக நடைமுறையில் சாத்தியமான வகையில் நிதியைத் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறைகளும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவில்லை.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக  பதவியேற்றுக்கொண்டு ஒரு வருடம் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அவர் மக்களுக்கு உரையாற்றியிருக்கின்றார். 

எனினும், அவரிடம் ஊடகங்கள் கேள்வியெழுப்புவதற்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் ஜனாதிபதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று 2021 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத்திட்டத்தை பிரதமர் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். 

மக்களை முழுவதுமாக ஏமாற்றக்கூடியவாறான இவ்வாறானதொரு வீரகாவியத்தை நான் இதற்கு முன்னர் கேட்டதேயில்லை. 

பொய்யான விடயங்களைக் கூறுவது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாமனைவரும் அறிந்திருக்கின்றோம். 

எனினும், அதனை மக்கள் தெரிந்துகொள்ளும்போது எமது நாடு மீண்டெழ முடியாத நிலையை அடைந்திருக்கும்.

மேலும், சேவைகளுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் அதன்மூலமான வருமானம் 631 பில்லியன் ரூபாவிலிருந்து 823 பில்லியன் ரூபாவாக உயர்வடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் மேலதிக வருமானம் பெறுமதிசேர் வரியின் ஊடாகவே பெறப்படுகின்றது. 

ஆனால், அது அரசாங்கத்தினால் 15 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் வரையில் குறைக்கப்பட்டுள்ளது. 

அவ்வாறிருக்கையில், வரியின் ஊடாக மேற்கண்டவாறு வருமானம் அதிகரிப்பது எவ்வாறு சாத்தியம்? அதேபோன்று வழமையாக இறக்குமதிகளின் மீது விதிக்கப்படும் வரியின் மூலம் உயர்வருமானம் பெறப்படும். 

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதற்கும் மட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் கூறுவதைப்போன்று வருமானத்தைப் பெறுவது சாத்தியமில்லை.

அடுத்ததாக முழுநாட்டிற்கும் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுக்கொடுக்கும் யோசனையின் கீழ், ஒட்டுமொத்த இலங்கையையும் உள்ளடக்கிய வகையில் 4G தொழில்நுட்பத்தை கட்டமைக்கப்போவதாக அரசாங்கம் குறிப்பிட்டிருக்கிறது. 

எனினும், அதற்காக 15 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதனூடாக ஒட்டுமொத்த நாட்டிற்கும் தொடர்பாடல் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுக்கொடுப்பது எவ்வாறு சாத்தியம்? 

அதனைக்கொண்டு பாடசாலைக்கு கட்டடத்தொகுதியொன்றைக்கூட நிர்மாணிக்க முடியாது.

அரசாங்கத்தின் இலக்குகள் சிறந்தவையாகவே இருக்கின்றன. 

எனினும் அவற்றை செயற்படுத்துவதற்கு கொள்கை ரீதியில் பொருத்தமான செயற்திட்டங்களும் அதற்காக நடைமுறையில் சாத்தியமான வகையில் நிதியைத் திரட்டிக்கொள்வதற்கான வழிமுறைகளும் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

இவ்வாறு நடைமுறையில் சாத்தியப்படாத யோசனைகளே வரவு - செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. 

அதுமாத்திரமன்றி பொருளாதார ரீதியில் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வேறுபல தரவுகளும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவையாகவே இருக்கின்றன என்றார்.