(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை கடன் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள போதிலும் அவற்றில் இருந்து விடுபடும் மாற்று வேலைத்திட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திடம் இருப்பதாகவும், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவில் சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டுவரை நாட்டில் எந்தவொரு பொருளாதார வளர்ச்சியும் ஏற்படவில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையில் இலங்கை மத்திய  வருமானம் பெரும் நாடக மாறியது, ஆனால் 2014 ஆம் ஆண்டின் பின்னர் நிலைமை மாற்றம் கண்டது. 2014 ஆம் ஆண்டு நாட்டின் தலா வருமானம் 7.4 வீதமாக இருந்தது. ஆனால் இதுவே 2019 ஆம் ஆண்டு 2.3 வீதத்திற்கு குறைவடைந்தது. இதேபோல் சகல துறைகளிலும் வீழ்ச்சியே காணப்பட்டுள்ளது. எமக்கு நாட்டை ஒப்படைக்கும் போது மிக மோசமான நாடாகவே காணப்பட்டது. ஆனால் 2015 தொடக்கம் நல்லாட்சி அரசாங்கம் எந்தவித சவால்களும் இல்லாத நாட்டையே பொறுப்பேற்றனர். ஆனால் மீண்டும் நாட்டை ஒப்படைக்கும் போது நாட்டினை நாசமாக்கியே கொடுத்தனர் என்றார். 

நாம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம், சுனாமி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்தோம். இவற்றையெல்லாம் வெற்றிகொண்டு மிகச்சிறந்த நாடாக மாற்றப்பட்டது. விரைவான அபிவிருத்தி கண்டது. இப்போது நாடாக பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. 

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியில் மிக்கபெரிய இரண்டு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. ஒன்று ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சி, அதேபோல் இப்போது தாக்கத்தை செலுத்தி வருகின்ற கொவிட் -19 வைரஸ் தாக்கம். இந்த இரண்டும் நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நாம் கடன்களை செலுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே வருகின்றோம் என்றார்.