அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் உள்ள தனது நாட்டின் இராணுவ இருப்பின் பெரும்பகுதியை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.

குறிப்பாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டிரம்ப் பதவியில் இருந்து விலகும் போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 4,500 முதல் 2,500 வரை குறையும் என்று செயல் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் மில்லர் தெரிவித்தார்.

அது மாத்திரமன்றி ஈராக்கில் படையினரின் எண்ணிக்கை சுமார் 3,000 முதல் 2,500 ஆகவும் குறைக்கப்படும்.

ஜனவரி 20 ஆம் திகதி ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இந்த நடவடிக்கைகள் முழுமை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஜனாதிபதி டிரம்ப், தனது தேர்தல் தேல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருவதாகவும் கிறிஸ்டோபர் மில்லர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஒக்டோபர் 2001 முதல் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் உள்ளன. தலிபான் மற்றும் ஆப்கானிய அதிகாரிகளுக்கிடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் எட்டப்பட்ட போதிலும் தொடர்ந்தும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.