(செ.தேன்மொழி) 

சுய தனிமைப்படுத்தப்படுத்தலில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தல்  சட்டத்தை மீறும் பட்சத்தில் அவர்களுடைய  அசையும், அசையா  சொத்துக்கள்  பறிமுதல்  செய்யப்படும் என  பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர்  அஜித்  ரோஹண  தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில்  ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள  அவர்  மேலும் கூறியுள்ளதாவது, 

நாடளாவிய  ரீதியில்  28 ஆயிரத்து 472 குடும்பங்களை  சேர்ந்த  77ஆயிரத்து 531 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டள்ளனர்.

இவர்களுக்கு அத்தியாவசிய தேவைகள் ஏற்படின் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களின் ஊடாக  சுகாதார  மற்றும் பாதுகாப்பு தரப்பினரை  தொடர்பு  கொண்டு  அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். 

அதற்கு மாறாக வீடுகளை  விட்டு வெளியேறும்  பட்சத்தில்  அவர்களுக்கு எதிராக  தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை  எடுக்கப்படும். அது மாத்திரமல்லாது  அவர்களுடைய அசையும்  , அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

ஏனெனில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வீடுகளை  விட்டு வெளியேறி நடமாடுகின்றமை  தொடர்பில்  தகவல்கள்  கிடைக்கப்பெற்றுள்ளன.  இது  தொடர்பில்  கண்காணிப்பு நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்காக  சுகாதார  மற்றும் பாதுகாப்பு படையினர்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும்  கம்பஹா மாவட்டத்தின்  24 பொலிஸ்  பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன. அவற்றில்  6 பொலிஸ் நிலையங்களில்   பிரதான பேருந்து நிலையம் ,ரயில்  நிலையம்  உள்ளிட்ட  முக்கிய இடங்கள்  அமைந்திருப்பதனால் குறித்த  பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்ட  அளவில்  இடம் பெற்று வருகின்றது.

வேறு பிரதேசத்தை  சேர்ந்த பயணிகள் பேருந்து மற்றும் ரயில்  சேவைகளை  பெற்றுக்கொள்ள முடியும்.  மாறாக அந்த பகுதிகளின்  வேறு  இடங்களுக்கு செல்ல முடியாது. அதனை  அவதானிக்க  ட்ரோன்  கமெரா மற்றும் ஹெலிகொப்டர் ஊடாக  கண்காணிப்பு நடவடிக்கை  முன்னெடுக்கப்படுகின்றது. அதற்கமைய, வகையில் நேற்றுமுன்தினம்  மாத்திரம் 95  பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொட்டாஞ்சேனை , ஜா-எல ,வத்தளை மற்றும் வாழைத்தோட்டம் ஆகிய பொலிஸ் பிரிவுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.

இதேவேளை , முகக்கவசம் அணிதல்  , சமூக இடைவெளியை  பேணல்  உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை  பேண தவறிய  7பேர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது வரையில்  குறித்த சுகாதார விதிமுறையை பின்பற்ற தவறிய 297 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.