(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து உயர்மட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இணையவழியூடாக இடம்பெற்றது. இதன் போதே இணைப்பேச்சாளர் ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம்  முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றும், ரெபிட் அன்டிஜன் பரிசோதனை முறைமையினை செயற்படுத்தி பி.சி.ஆர் பரிசோதனையினை மட்டுப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக  எதிர்தரப்பினர்  போலியான  குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.

தற்போது 6 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகளவில் பி.சி.ஆர் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை 8 ஆயிரத்துக்கும் அதிகளவில் முன்னெடுக்கப்படுகின்றன.

முல்லேரியா வைத்தியசாலையில் உள்ள  பி.சி.ஆர் இயந்திரம் பழுதடைந்து விட்டதாக போலியான செய்திகள் வெளியிடப்படுகின்றன. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், இறந்தவர்களின் எண்ணிக்கையும் மறைக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் சர்வதேச பொறிமுறைகளுக்கு அமைய முன்னெடுத்துள்ளது. சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களை பொதுமக்கள் முழுமையாக பின்பற்றினால் மாத்திரமே  தற்போதைய நெருக்கடியை வெற்றிக் கொள்ள  முடியும்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.