ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி - நாகஞ்சோலையில் 180 ஏக்கர் காடுகள் அழிப்பு 

By T Yuwaraj

17 Nov, 2020 | 03:49 PM
image

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களான சண்முகம் தவசீலன், கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய 2 ஊடகவியலாளர்கள் மீது மரக்கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட  தாக்குதலின் பின்னணியில் நீதிமன்றின் உத்தரவின் பெயரில் முல்லைத்தீவு பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட ஊடகவியலாளர்களால் தேக்குமரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்ட  வனப்பகுதிகள் உள்ளடங்கலான நாகஞ்சோலை வன பகுதியில் 180 ஏக்கர் அரச காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத காடழிப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை (17) இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வழக்கில் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிகமான தகவல்களை அவர்கள் சம்பவத்தினத்தன்று சென்று செய்திகேகரித்த வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு முழுமையாக சமர்ப்பிக்குமாறு பொலிசாரிடம் மன்று கேட்டதற்கு இணங்க பொலிசார் அன்றயதினமே (03-11-2020) ஊடகவியலாளர்கள் இருவரையும் அழைத்து சென்று குறித்த பகுதிகளை பார்வையிட்டனர்.  

இதனை தொடர்ந்து அவர்கள்  மேற்கொண்ட விசாரணையின் போது ஊடகவியலாளர்கள் ஆய்வு செய்த இடங்களில் 180 ஏக்கர் அரச காடுகள் அழிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

யார் அழித்தது என்பது தொடர்பில் இதுவரையில் உறுதிப்படுத்த முடியாது இருப்பதாக பொலிசாரும் வனவளத்திணைக்களத்தினரும் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த பகுதியில் காடழிப்பு தொடர்பில் சில வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அழிக்கப்பட்ட மரங்கள் ஒரு தொகுதியும்  கைப்பற்றப்பட்டுள்ளன, ஆனால் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என மன்றில் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த பகுதியில் பாரிய காடழிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான உரிய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சூழலியலாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right