(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் வீதிகளில் மரணித்துக்கிடப்பதாக போலிச் செய்தியை பரப்பிய திட்டமிட்ட குழு தொடர்பில் சர்வதேச பொலிசாரின்  உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஜப்பான் மற்றும் அவுஸ்ரேலியாவை சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இலங்கையில் வீதிகளில் மரணித்து கிடப்பதாக போலிச்செய்தி திட்டமிட்ட குழுவொன்றினால் பரப்பப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் மாவனெல்லை குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அந்த வகையில் நாட்டில் இது வரையில் 61 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

அதில் ஒரு மரணம் மாத்திரமே வீதியில் இடம் பெற்றிருந்தது. அதுவும் அவர் ஒரு யாசகராக இருந்தமையினால் வீடு அற்ற நிலையிலேயே அவர் வீதியில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார். மாறாக வேறு எவரும் இவ்வாறாக வீதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மரணிக்கவில்லை.

இந்நிலையில், இந்த போலிச்செய்தியில் வீதிகளில் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துகிடப்பதாக சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த விசாரணைகளுக்கு அமைய இருவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடுகன்னாவ மற்றும் கண்டி, கத்தானை பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் 36 பேர் கொண்ட குழுவினூடாடாக இந்த செயற்பாடு இடம் பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. அந்த குழுவைச்சேர்ந்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒருவர் ஜப்பானில் வசிக்கும் இலங்கை பிரஜை மற்றையவர் அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர். அவருடைய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச பொலிசாரின் உதவியுடன் இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த சந்தேக நபர்கள் தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடத்தில் தகலவ் வழங்கப்படுள்ளது. அவர்கள் இலங்கைக்குள் எந்த வகையில் நுழைந்தாலும் கைது செய்யப்படுவர்.

அதற்கமைய, தாய்நாட்டில் நெருக்கடி நிலைமை காணப்படுகின்றது. இந்நிலையில் உண்மை தகவல்களை பகிர்வதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மாறாக உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது முறையற்ற செயற்பாடாகும். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் செய்திகளை பகிர்வதை தவித்துக்கொள்ளுங்கள் என்றும் தெவித்துள்ளார்.