கொழும்பில் 17 , கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவுகள் தவிர ஏனையவை தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு 

(எம்.மனோசித்ரா)

மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் நீக்கப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

இதே வேளை கொழும்பில் 17 பொலிஸ் பிரிவுகளும் , கம்பஹாவில் 7 பொலிஸ் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு ஏனைய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை , தனிமைப்படுத்தலை நீக்கல் மற்றும் சில பிரதேசங்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் என்பன குறித்து நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது : 

கொழும்பு மாவட்டம் 

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 12 பொலிஸ் பிரிவுகளுக்கு மேலதிகமாக 5 பொலிஸ் பிரிவுகள் இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. 

மருதானை பொலிஸ் பிரிவு, கோட்டை பொலிஸ் பிரிவு, புறக்கோட்டை பொலிஸ் பிரிவு, கொம்பனி வீதி பொலிஸ் பிரிவு மற்றும் டாம் வீதி பொலிஸ் பிரிவு என்பன மேற்கூறியவாறு இன்று காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன. 

கம்பஹா மாவட்டம்

கம்பஹா மாவட்டத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் 7 பொலிஸ் பிரிவுகளைத் தவிர ஏனையவை நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளன. 

அதற்கமைய நீர்கொழும்பு, ஜாஎல, ராகமை, கடவத்தை, வத்தள, பேலியகொடை ஆகிய 6 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவே காணப்படும். இதே வேளை களனி பொலிஸ் பிரிவு இன்று திங்கட்கிழமை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏனைய மாவட்டங்களில் தனிமைப்படுத்தலிருந்து விடுக்கப்படும் பகுதிகள்

குருணாகல், களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பகுதிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 5  மணி முதல் தனிமைப்படுத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ளன. 

 குருணாகல்  

குருணாகலில் குருணாகல் மாநகரசபை எல்லை மற்றும் குளியாபிட்டி பொலிஸ் பிரிவு என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளன. 

  களுத்துறை  

இதே போன்று களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை, இங்கிரிய ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளும் வேகட படஹிர கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றன.

  கேகாலை  

கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் மாவனெல்லை ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுக்கப்பட்டுள்ளன.