-சிவலிங்கம் சிவகுமாரன்

அமெரிக்கா மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டில் தமிழர்கள் உயர்பதவிகளில் அமர்ந்தாலும்  அது உலக வாழ் தமிழர்களுக்கே பெருமையாக இருக்கின்றது. அப்படியானதொரு சம்பவமே அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸ் விடயத்திலும் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 

இதற்கு முன்பதாக  பல தமிழர்கள் உலகின் பலமான மனிதர்களாக வலம் வந்தாலும் கமலா ஹரிஸை ஏன் தமிழ் கூறும் நல்லுலகு தலையில் தூக்கி கொண்டாடுகின்றதென்றால் அவர் துணை ஜனாதிபதியாகியிருப்பது உலக வல்லரசான அமெரிக்காவுக்கு என்பதாகும். 

அவரது தாயார் இந்திய வம்சாவளி தமிழர் என்ற ஒரே விடயத்துக்காகவும் தமிழ்ப்பெயரை அவர் கொண்டிருப்பதன் காரணத்தினாலுமே இந்த பரபரப்புகள். அவருக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்ற ஆராய்ச்சிகள் எல்லாம் இங்கு தேவையற்றது. அவரது தந்தை ஜமைக்காவை சேர்ந்த கிறிஸ்தவர் கறுப்பினத்தவர் என்ற வரலாறும் தமிழர்களுக்கு அவசியப்படவில்லை.  

படவிளக்கம் (in Order)  : கமலா ஹரிஸ்– ராஜா கிருஷ்ணமூர்த்தி– அனிதா ஆனந்த்– சசீந்திரன் முத்துவேல்– மோசஸ் வீராசாமி நாகமுத்து

ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஸின் பக்கமே ஆசிய ஊடகங்கள் அதிகமாக தமது கவனத்தை திருப்பியிருந்தன. அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களும் அதற்கு வலு சேர்த்தன. 

முதலாவது கமலா ஹரிஸ் தனது அலுவலகத்தின் தலைமை அதிகாரியாக யாழ்ப்பாணத்தை பூர் வீகமாகக்கொண்ட பெண்ணான ரோகினி லக்ஷ்மி ரவீந்திரன் கொசோக்லு என்ற பெண்ணை நியமித்தமை , இரண்டாவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தனது கொரோனா கட்டுப்பாட்டு குழுவில் தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டத்தை பூர் வீகமாகக்கொண்ட செலின் ராணி என்ற மருத்துவரை இணைத்துக்கொண்டமையாகும்.

கமலா ஹரிஸ் மற்றும் செலின் ராணி ஆகியோர் இந்திய வம்சாவளி பூர்விகத்தை கொண்டிருந்தாலும் மறுபக்கம் ரோகினி லக்ஷ்மியின் பெற்றோர்  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மேற்கூறிய மூவருமே அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அந்த கலாசாரத்துக்கு உட்பட்டவர்கள். எனினும் அவர்களின் பெற்றோர்கள் தமிழர்கள் என்ற பின்னணியில் இன உணர்வால் உந்தப்பட்டமையும்  அதனால் உருவான பெருமிதமே அனைவரையும் அவர்கள் பால் ஈர்த்துள்ளது. 

எனினும் உணர்ச்சிவசப்பட்டு இவர்களால் இலங்கையிலோ அல்லது உலகத்தில் பல பாகங்களிலும் வாழ்ந்து வரும் தமிழர்களுக்கோ நன்மை நடக்கப்போகின்றது என்று அசட்டுத்தனமாக பேசிக்கொண்டிருந்தால் அது நேரத்தை போக்கும் செயல் என்றே கூறலாம். ஏனெனில் கமலா ஹரிஸுக்கு துணை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரவாக இருந்தவர்கள் தமிழர்கள் இல்லை, அவர்கள் அமெரிக்கர்களே. ஆனால் இந்த விடயங்கள் கூட புரியாது சில சிரேஷ்ட அரசியல் பிரமுகர்கள் கூட ஏதோ உலக வாழ் தமிழர்களுக்கெல்லாம் நன்மை நடக்கப்போகின்றது என அறிக்கைககள் விட்டு வருவது மிகவும் ஹாஸ்யமாக இருக்கின்றது.

எமது நாட்டின் மூத்த அரசியல் பிரமுகர் ஆர்.சம்பந்தனும் கூட இலங்கை தமிழர்கள் பிரச்சினைகள் பற்றி ஜோ பைடனுடனும் கமலா ஹரிஸுடனும் பேச்சு நடத்துவோம் என்று கூறியுள்ளார். இலங்கையின் உள்ளக பிரச்சினைகளில் அருகில் உள்ள இந்தியாவே தலையிடக் கூடாது என இங்குள்ள பேரினவாதிகள் காலா காலமாக கூறி வருகின்றனர். 

இந்நிலையில் அவ்வளவு தூரத்திலிருக்கும் அமெரிக்கா தான் இனியும் இந்த மக்களுக்கு தீர்வை தரப்போகின்றத? அது வழமையாக சம்பந்தன் போன்றோர் தெரிவித்து வரும் கருத்துக்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். அப்படியானால் ஏன் தமிழர்கள் பிரச்சினை பற்றி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் பேச்சு நடத்தவில்லை என்று எவரும் கேட்டு விடக்கூடாது.

 

வலிமையான பொறுப்புகளில் தமிழர்கள்

இன்று உலகின் பல நாடுகளில் தமிழர்கள் வலிமையான பொறுப்புகளிலும் பதவிகளிலும் இருக்கின்றனர். ஒரு பக்கம் வர்த்தக சாம்ராஜ்யங்களின் தலைவர்களாகவும் கோடீஸ்வரர்களாகவும் விளங்கும்  தமிழர்கள் வேறு. அவர்கள் தமது பூர்வீக மண்ணின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தளவுக்கு உதவி செய்திருக்கின்றார்கள் அல்லது செய்து வருகின்றார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் புரியும். 

அவர்களின் முதலீடுகளை தாம் பிறந்த மண்ணில் போட்டால் சரிபட்டுவராது என்ற காரணத்தினாலேயே அவர்கள் தாம் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் நாடுகளிலேயே வர்த்தகத்தை விரிவு படுத்துகின்றனர். அதற்கு பிரதான காரணம் குறித்த நாட்டின் பொருளாதார கொள்கைகளாகும். 

இன்று ஆசியாவின்  கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் ஐந்து  இடங்களுக்குள் உள்ள தமிழரான ஆனந்த கிருஷ்ணனின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை பூர் வீகமாகக்கொண்டவர்கள். அது குறித்து இலங்கை தமிழர்கள் பெருமை பட்டுக்கொள்ள மட்டுமே முடியும், அவர் இரட்டை கோபுரங்களை (பெட்ரோனஸ் டவர்) கோலாலம்பூரில் தான் அமைத்தார். இலங்கையில் அல்ல. ஏனென்றால் அவர் மலேசியர். 

வர்த்தகர்களை விட்டு அரசியல் மற்றும்  தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் சார்ந்த உலக நிறுவனங்களை எடுத்துப் பார்த்தாலும் அப்படியே இருக்கும். உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையகமாகக் கொண்டுள்ளது. இதன் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரி சுந்தர் பிச்சை ஒரு சென்னைத்  தமிழர். உலகில் அதிக சம்பளம் வாங்கும்  தமிழ் நிறைவேற்று அதிகாரியாக விளங்குகிறார். 

ஆனால் அவரால் அமெரிக்காவிலும் கூகுளின் துணை நிறுவனங்கள் உள்ள நாடுகளில் மட்டுமே தனது அதிகாரத்தை பயன்படுத்த முடியும். இப்படி ஒரு பொறுப்பில் தமிழர் ஒருவர் இருக்கின்றாரே என்று பெருமைப் பட முடியுமே தவிர அவரால் கூகுள் நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலை வாங்கி கொடுக்க முடியுமா ? அல்லது அப்படி எதுவும் நடந்துள்ளதா?

 

அரசியலில்

உலகின் அதிகாரமிக்க பதவிகளில் இருக்கும் தமிழ் மண்ணை பூர்விகமாகக்கொண்டர்வகள் என்று பார்த்தால் முதலிடத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் இருக்கின்றார்.  அடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் தனிப்பட்ட ஆலோசகராக விளங்கிய ராஜா கிருஷ்ணமூர்த்தியை கூறலாம். இவரது பெற்றோர்கள்  தமிழகத்தின் விருது நகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.  

இவர் பிறந்தது டில்லியில். இவர் அமெரிக்காவின் இலினோய் மாநிலத்தின் கீழவை உறுப்பினராக 2017 ஆம் ஆண்டிலிருந்து விளங்குகிறார். அடுத்ததாக கனடாவின் பொதுத்துறை அமைச்சராக விளங்கும் அனிதா ஆனந்தை கூறலாம். இவரது பூர்வீகம் தமிழகத்தின் வேலுர் ஆகும். கடந்த ஆண்டு இடம்பெற்ற கனடா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று அந்நாட்டு அமைச்சரவையில் இடம்பிடித்த முதல் தமிழ்ப் பெண்ணாக விளங்குகிறார். 

அடுத்த இடத்தில் பப்புவா நியூ கினியாவின் மத்திய அமைச்சராக விளங்கும்   சசீந்திரன் முத்துவேல் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றார். இவர் சிவகாசியை பிறப்பிடமாகக்கொண்ட தமிழர். தமிழ் வழி கல்வி பயின்ற இவர் 1999 ஆம் ஆண்டே பப்புவா நியூ கினியா சென்றார். 2012 ஆம் ஆண்டு அந்நாட்டின் நியூ வெஸ்ட் பிரிட்டன் மாகாணத்தின் ஆளுநராக 6 வருடங்கள் விளங்கினார். என்பது முக்கிய விடயம். அதையடுத்து கயானா நாட்டின் பிரதமராக ஒரு தமிழர் இருக்கின்றார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மோசஸ் வீராசாமி நாகமுத்து. இவர் இந்திய வம்சாவளி தமிழர் என்பது முக்கிய விடயம்.

மேற்கூறிய அனைவருமே தத்தமது நாட்டில் தமது பணிகளை தமது நாட்டுக்காக முன்னெடுத்து வருகின்றனர். எக்காரணம் கொண்டும் தமது பூர்வீகம் பற்றியோ அந்த நாட்டுக்கு சேவையாற்ற வேண்டுமென்றோ எங்கேயும் கூறியதாக தகவல்கள் இல்லை. அப்படியான விடயங்களை எவரும் எதிர்ப்பார்க்கவும் முடியாது. 

அப்படி அவர்களால் செய்யவும் முடியாது. பிரச்சினைகள் இல்லாத நாடுகள் உலகில் இல்லை. ஒரு நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க வேறு ஒரு நாட்டின் தலைவரோ தலைவியோ தான் வர வேண்டும் என்றால் அதற்காக கனவு கண்டு கொண்டிருக்க முடியாது. இங்கு எமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்க வேண்டும். ஏனென்றால் பிரச்சினைகளுக்கு காரணம் வெளியார் இல்லை நாமே காரணம். ஆகையால் அவற்றை எம்மால் மட்டுமே தீர்க்க முடியும்.  இதைத்தான் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கனியன் பூங்குன்றனார் அருமையாக கூறி வைத்தார். 

தீதும் நன்றும் பிறர் தர வாரா…!