காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கேரளாவைச் நடிகை அமலாபால், கடந்த 2010 ஆம் ஆண்டில், 'வீரசேகரன்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். 

அவர் தொடர்ந்து, 'சிந்து சமவெளி,' 'மைனா,' 'தெய்வ திருமகள், 'தலைவா,' 'வேலையில்லா பட்டதாரி,' 'அம்மா கணக்கு' உள்ளிட்ட பல தமிழ் தரைப்படங்களில் நடித்தார். இப்போது, தனுஷ் ஜோடியாக 'வட சென்னை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 'கிரீடம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, 'மதராச பட்டினம்,' 'தலைவா,' 'தாண்டவம்,' 'சைவம்,' 'இது என்ன மாயம்' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் விஜய்.

இருவருக்கும் சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. விஜய் இயக்கிய 'தலைவா,' 'தெய்வ திருமகள்' ஆகிய திரைப்படங்களில் அமலாபால் கதாநாயகியாக நடித்தார். 

அப்போது இரண்டு பேருக்கும் இடையே புரிதல் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் திகதி கேரள மாநிலம் கொச்சியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றது. 

அதையடுத்து ஜூன்  மாதம் 12 ஆம் திகதி சென்னையில் திருமணம் இடம்பெற்றது. திருமணத்துக்குப்பின் அமலாபால், கணவருடன் சென்னையில் குடியேறினார். சென்னை அடையார் போட் கிளப்பில் உள்ள ஒரு பங்களாவில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தினார்கள்.

அமலாபால் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். அவர் நடிப்பதை இயக்குனர் விஜய்யும், அவருடைய குடும்பத்தினரும் விரும்பவில்லை. கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். இது, விஜய் - அமலாபால் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இதையடுத்து இருவரும் சுமுகமாகப்பேசி பிரிவது என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி, அமலாபால், இயக்குனர் விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள். 

இயக்குனர் விஜய் தனது பெற்றோர்களுடன் வசிக்கிறார். அமலாபால், சென்னையில் தனியாக வசிக்கிறார். இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள். இந்த விவகாரம், தமிழ்-மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.