யாழ். நகரில் புடவை நிலையம் நடத்தும் வர்த்தகர் தீபாவளிப் பண்டிகை விற்பனை முடிந்து மனைவியுடன் வீடு திரும்பிய போது மனைவியின் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தி 6 இலட்சம் ரூபா பணமும் 12 பவுண் தாலிக் கொடியும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

யாழ். நகரின் மத்தியில் இரு புடவையகம் நடத்தும் சோமசுந்தரம் வீதியில் வசிக்கும் வர்த்தகர் தீபாவளி விற்பனையில் ஈடுபட்டு 12ஆம் திகதி(வியாழக்கிழமை) இரவு கணவனும் மனைவியுமாக வீடு திரும்பியுள்ளனர். 

இதன்போது வீட்டிற்கு அண்மையில் 3 மோட்டார் சைக்கிளில் காத்திருந்த ஐவர் திடீரென பாய்ந்து குறித்த வர்த்தகரின் மனைவியை இழுத்து அவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தியதோடு கணவனின் கையில் இருந்த பையை பறித்தெடுத்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையர்கள் பறித்த பையில் விற்பனைப் பணம் 6 இலட்சம் ரூபா இருந்த அதேநேரம் மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுண் தாலிக்கொடி  மற்றும் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு ஓடியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட இழுபறியில் கழுத்தில் இருந்த  சங்கிலி மட்டும் அறுந்து வீழ்ந்தமையினால் அது தப்பியது.

இது தொடர்பில் பொலிசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து பொலிசார் மோப்ப நாய் சகிதம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.