அமெரிக்க அணுகுமுறை மாறுமா?

Published By: J.G.Stephan

15 Nov, 2020 | 03:00 PM
image

* ‘இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இருக்காது போனாலும், இலங்கையுடனான அணுகுமுறையில் மாற்றங்கள் எற்படலாம்’

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்து, ஜனநாயக கட்சியின் வேட்பாளர், ஜோபைடன் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இந்தஆட்சிமாற்றம், உலகம்முழுவதற்கும் சாதகமானதாக பார்க்கப்படுவதைப் போலவே, இலங்கைக்கும் சாதகமானதாக இருக்கும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் சஜித்பிரேமதாச.

ஜோபைடன் தெரிவு செய்யப்பட்டதும், இலங்கையில்இருந்து முதன்முதலில் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தவர், சஜித்பிரேமதாச தான்.ஜோபைடன், ஆட்சியில் அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை பலப்படுத்திக்கொள்வது, நாட்டுக்குப் பாதகமில்லாத உடன்பாடுகளைச் செய்து கொள்வதில் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் அவர் கோரியிருக்கிறார்.

எம்.சி.சி உடன்பாட்டைக் கிழித்தெறிவேன் என்று சபதம் செய்தவர் சஜித் பிரேமதாச. அவர் இப்போது, சாதகமான உடன்பாடுகளை அமெரிக்காவுடன் செய்து கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதேவேளை, ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவித்து செய்திகளை பகிர்ந்துள்ள ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கூட இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில், இந்த ஆட்சி மாற்றம் இலங்கை விவகாரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்ற பலமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நீண்டகால நட்புறவு இருந்தாலும், இப்போது, சீன- இலங்கை உறவுகளாலேயே, அமெரிக்க- இலங்கை உறவு தீர்மானிக்கப்படும் ஒன்றாக மாறியிருக்கிறது.

போர் முடிவுக்கு வந்த பின்னர், சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளதை அடுத்தே, இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா கூடுதல் அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறது.

அண்மையில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்பொம்பியோவின், இலங்கைப் பயணம் அதனை உறுதிப்படுத்தியது. அவர், கொழும்பில் வைத்து, சீனாவை விட்டுவிட்டு, அமெரிக்காவுடன், இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை இலங்கை நிராகரித்து விட்டது.  அவ்வளவு இலகுவாக சீனாவின்‘கதகதப்பான அரவணைப்பில்’இருந்து இலங்கையினால் விடுபட முடியாது.

இவ்வாறானதொரு பின்புலத்தில், நிகழ்ந்திருக்கின்ற மாற்றம், இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், குடியரசுக் கட்சி, ஜனநாயக கட்சி என்பனவற்றுக்குள் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தாலும், வெளிவிவகாரக் கொள்கை விடயத்தில் பெரியளவில் முரண்பாடுகள் இருப்பதில்லை.

அவை பெரும்பாலும் பொதுவானவையாகத்தான் இருந்து வருகின்றன. ஆனாலும், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், அமெரிக்காவின் நலன்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும் கொள்கைகளை கடைப்பிடித்தார். உதாரணமாக, பிற நாடுகளில்அமெரிக்க தனது படையினரை நிறுத்தியும், இராணுவ வளங்களை ஈடுபடுத்தியும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது அவரது இலக்கு.

இதன் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் இருந்து, ஈராக்கில் இருந்து, சிரியாவில் இருந்து, அமெரிக்க படைகள் விலக்கிக் கொள்வதற்கான கணிசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஜப்பானில் இருந்தும் படையினர் குறைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் வளங்கள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கே அதன் தேவைகளுக்கே என்ற வகையில் ட்ரம்ப் செயற்பட்டு வந்தார்.

ஜனநாயக கட்சி இவ்வாறான போக்கை கடைப்பிடிக்கும்என்றுஎதிர்பார்க்கமுடியாது,ஆனாலும், அமெரிக்காவின் இராணுவ, பொருளாதாரக் கூட்டுகளை பலப்படுத்துவதில், இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் விதி விலக்குகள் இருப்பதில்லை. வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றங்கள் இருக்காது போனாலும், இரண்டு கட்சிகளினதும் அரசாங்கங்களுக்கும் இடையில் அணுகுமுறை வேறுபாடுகள் இருப்பது வழக்கம். ஏதேனும் ஒருவிவகாரத்தை மென்மையாகவும், கடுமையாகவும் கையாளுகின்ற வகையில், அணுகுமுறைகள் வேறுபடும்.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இருக்காது போனாலும், இலங்கையுடனான அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கணிப்புகளும் உள்ளன. ட்ரம்ப் அரசாங்கம், இலங்கைக்கு தலைவலிகொடுக்கும் ஒன்றாக இருந்ததில்லை. ட்ரம்ப் பதவிக்கு வந்தபோது, தற்போதைய ஆட்சியாளர்கள் அதனை வரவேற்றிருந்தார்கள். ஜனநாயக கட்சியை விட குடியரசுக்கட்சி ஆட்சியில் இருந்த காலங்களில், இலங்கை அரசுக்கு சாதகமான பலவிடயங்கள் நடந்தேறின என்பது, அவர்கள் மத்தியில் உள்ள கருத்து.

ஆனால், குடியரசுக்கட்சியைச் சேர்ந்த ட்ரம்பின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு பாதகமான நகர்வுகள் இடம்பெற்றிருக்காது போயிருந்தாலும், அதிகம் சாதகமான நகர்வுகள் இருக்கவில்லை என்பதே உண்மை.இப்போது மீண்டும் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வருகிறது. 

ஜனநாயககட்சி ஒப்பீட்டளவில், இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கம் குறைவானது என்ற கருத்துக்கு மத்தியில், இந்த மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். ஜனநாயக கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான், இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டன. 2011இல் தொடங்கப்பட்ட இதற்கான முயற்சிகள் 2012இல் முதலாவது தீர்மானமாக கொண்டு வரப்பட்டது.

அதற்கடுத் தடுத்த தீர்மானங்களை அமெரிக்கா நேரடியாகவே முன்வைத்து வந்தது. எனினும், ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இருந்து அமெரிக்காவிலகிக் கொண்டது, ஆனாலும், பேரவைத் தீர்மானங்களில் அமெரிக்காவின் வகிபாகத்தை குறைத்துக் கூறமுடியாது.

இப்போது, மீண்டும் ஜனநாயக கட்சி பதவிக்கு வரவுள்ளபோதும், உடனடியாக, ஐ.நாமனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இடம்பிடிக்க முடியாது. ஆனாலும், வரும் பெப்ரவரி- மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள பேரவைக்கூட்டத் தொடரில், அமெரிக்காவின் கூடுதலான தலையீடுகள் இருக்கும் என்றே எதிர் பார்க்கலாம்.

ஜோபைடனின் அமைக்கவுள்ள அரசாங்கத்தில், இராஜாங்கச் செயலராக நியமிக்கப்படக்கூடியவர்கள் என்று எதிர்பார்க்கப்படுபவர்களில், முன்னிலையில் இருப்பவர் சூசன்ரைஸ். இவர் ஏற்கனவே, ஒபாமாவின் அரசாங்கத்தில், 2009 தொடக்கம் 2013 வரை, ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றியிருந்தார். இந்தப் பதவியில் இருந்து கொண்டுதான், இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைப்பதற்கான நகர்வுகளை முன்னெடுத்திருந்தார். எனினும், ஈராக்கின் பெங்காசி நகரில் இருந்த அமெரிக்க தூதுரகம் தாக்கப்பட்ட விவகாரத்தினால் இவர் ஐ.நாவுக்கான தூதுவர் பதவியில் இருந்து விலகினார்.

அதன் பின்னர், ஒபாமாவின் அரசாங்கத்தில், 2017 வரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவி வகித்திருந்தார். இவர் இராஜாங்கச் செயலராக நியமிக்கப்பட்டால், இலங்கை விவகாரத்தில் கூடுதல் அக்கறை செலுத்தும் வாய்ப்புகள் ஏற்படும் என்றும் எதிர்பார்ப்பு உள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறைகளிலும் வேறுபாடுகள் இருக்கக்கூடும். அண்மையில் கொழும்பு வந்த மைக்பொம்பியோ, தனியே சீனாவை மையப்படுத்தியே அமெரிக்காவின் நிலைப்பாடுகள் குறித்துப் பேசியிருந்தார்.

அவர் அமெரிக்காவின் ஏனைய நலன்கள் இலங்கையில் புறக்கணிக்கப்படுவது பற்றி பெரிதாக பேசவில்லை. உதாரணத்துக்கு, அமெரிக்கா வழங்க முன்வந்த எம்.சி.சி கொடையை இலங்கை ஏற்றுக்கொள்ளாமல் இழுத்தடித்து வரும் விவகாரம், அக்சா, சோபா போன்ற இராணுவ ஒத்துழைப்பு உடன்பாடுகளில் கையெழுத்திட மறுத்து வரும் விவகாரம், போன்றன குறித்து பொம்பியோ பேசவே விரும்பவில்லை.

ஏனென்றால், சீனாவை எதிர்க்கும் கூட்டணிக்குள் இலங்கையைக் கொண்டு வருவதற்காக, அவர் இந்த விடயங்களை முன்னிலைப்படுத்துவதை தவிர்த்திருந்தார்.அதுபோலத்தான், பொறுப்புக்கூறல் விவகாரத்தையும் அவர்கண்டு கொள்ளவில்லை. ஆனாலும் பொம்பியோவினால், இங்கிருந்து வெறும்கையுடன் தான்செல்ல வேண்டியிருந்தது.இந்த நிலையில், ஜனநாயக கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கையுடனான உறவுகளை வர்த்தகம் மற்றும் தொடர்புகளை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்போகிறதா, ஜனநாயகம், மனிதஉரிமைகள், நீதிபோன்றவற்றை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்போகிறதால், இல்லை, சீனா என்ற அளவுகோலை வைத்துதான் தீர்மானிக்கப்போகிறதா?  எவ்வாறாயினும் பொம்பியோ கையாண்ட மென்அணுகுமுறையை, சூசன்ரைசோ அல்லது வேறெவருமே, கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கமுடியவில்லை.

-சுபத்ரா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விடியும் வேளையில் வரப்போகும் திருப்பங்கள்

2024-02-28 18:49:12
news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48
news-image

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2024-02-27 16:00:41
news-image

ரஃபா எல்லைக் கடவையும் எகிப்து மற்றும்...

2024-02-26 16:15:11
news-image

அதிகாரத்துக்காக மக்கள் ஆணையைப் பறித்தல்

2024-02-26 15:48:00
news-image

ஆடி அடங்கிய பின் பிறக்கின்ற ஞானம் 

2024-02-26 15:36:27
news-image

விலகும் புதைகுழி மர்மம்

2024-02-26 15:15:32