புதிய சூழலை கையாளுமா தமிழர் தரப்பு..?

Published By: J.G.Stephan

15 Nov, 2020 | 01:43 PM
image

*“சர்வதேசதரப்புக்களிடமிருந்துதமிழ்அரசியல்தரப்புக்களின்“விலகல் நிலை” தான், தமிழர் பிரச்சினை சர்வதேசஅளவில்முக்கியமிழந்து போவதற்கு காரணம்”

*“அமெரிக்க அரசியலில் தீர்க்கமான பங்கை வகிக்கப்   போகும் கமலாஹரிஸ், ரோகினிலக்ஷ்மி, சூசன்ரைஸ் ஆகிய மூவரையும் தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப்போகின்றது”

சர்வதேச தரப்புகளை கையாளும் விடயத்தில் தமிழ்த் தரப்பிடம் “போதாமை நிலை” இருப்பதாக, ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்தியாவைச் சரியாக கையாளவில்லை என்றும், இந்தியாவுடனான தொடர்புகளைப் பேணுவதில் சரியாக செயற்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டு காணப்படுகிறது. அதுபோல,  தமிழ்த்தரப்பு தம்மிடம் இருந்து விலகியே இருப்பது போன்ற கருத்தை சீனாவும் கூட வெளிப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவுடனான ஊடாட்டங்களைக் கொண்டிருந்தாலும், அதுகூட, எந்தளவுக்கு தமிழர் தரப்பின் நலன்களை உறுதி செய்யும் அளவுக்கு வலுவானதாகஇருக்கிறது என்பதில் நியாயமான சந்தேகங்கள் உள்ளன. இவ்வாறானதொரு “விலகல் நிலை” தான், தமிழர் பிரச்சினை சர்வதேசஅளவில்முக்கியமிழந்து போவதற்கு ஒரு காரணம் என்றும், கூறப்படுகிறது. ஆனாலும், சர்வதேச தரப்புகள் தமது நலன்களுக்காக, தமிழர்களைக் கையாள முனைகின்றவே தவிர, தமிழர்களுக்காக அவர்களுடன் ஊடாடவில்லை என்ற பொதுவான நிலைப்பாட்டிலேயே தமிழர்கள் பலரும் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை.

இது கடந்தகால அனுபவங்களின் தொடர்ச்சியா- விரக்தியா- ஏமாற்றமா என்று பகுத்துப் பார்ப்பதைவிட, எல்லாவற்றினதும் திரட்சியாக குறிப்பிடலாம். எவ்வாறாயினும், இதுபோன்ற ஒரு இறுக்கமான நிலையில் இருந்து கொண்டு, சர்வதேச தரப்புகளுடன் தமிழர் தரப்பினால் இணைந்து செயற்பட முடியாது.

சர்வதேச உறவுகளுக்கும், வியாபாரத்துக்கும் பெரிய வேறுபாடு கிடையாது.  சர்வதேச உறவுச் சந்தைக்கு கொள்ளை இலாபம் அடிக்கும் வணிகரும் வருவார், கொஞ்ச இலாபத்துடன் கூடுதல் பொருட்களை விற்கும்வியாபாரியும் வருவார். இவ்வாறான ஒரு சந்தையில் ஒருவர் நலனை மற்றவர் புரிந்து கொண்டும், விட்டுக்கொடுத்தும், பலவேளைகளில் விடாப்பிடியாக நின்றும், வியாபாரம் செய்வது ஒரு தனிக்கலை தான்.

அந்தக்கலையை சரியாக கையாளுபவருக்குத்தான் இந்தச் சந்தை நம்பிக்கையை தரும். உதவியாகவும் இருக்கும். ஆனால், அந்தக் கலை நீண்ட காலமாகவே தமிழர்தரப்புக்கு கைவரவில்லை என்பது தான் உண்மை. தமிழ் மக்களின் அரசியலை விடுதலைப் புலிகள் கையாண்ட போதும் கூட, “இறுக்கநிலை”யில் இருந்து தளருவதற்கு அவர்கள் தயாராக இருக்கவில்லை. அது, தம்மைப் பலவீனப்படுத்தி விடும் என்றே அவர்கள் கருதினார்கள். அதைவிட, வெளிநாடுகளை நம்புவதற்கும் அவர்கள் அதிகம் தயாராக இருக்கவில்லை. சர்வதேச அரசியல்போக்குகள், நடைமுறையதார்த்தங்கள், அனுபவங்கள் என்பன அவர்களை சற்று தள்ளியே இருக்க நிர்ப்பந்தித்தன.

அதனால், அவர்களிடம் இருந்து பல நாடுகள் விலகிச் செல்லும் நிலையும் ஏற்பட்டது. இதன்விளைவாக, இறுதிக்கட்டத்தில் அபயக் குரல் எழுப்பிய போது, எந்த நாடும், உள்ளே வரத் தயாராக இருக்கவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியா, அமெரிக்கா போன்ற தரப்புகளை ஆரம்பத்தில் கையாள முனைந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த கையாளுதலும் முடங்கிப் போய் விட்டது. புதுடெல்லிக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பெரியதொரு “வெளி“ வந்து விட்டது.

அதனை நிரப்புவதற்கு விரைவில் “ஒரு சந்திப்பு” நடக்கும் போலத் தென்பட்டது, ஆனால், அதுவும் இன்னமும் கைகூடாமல் நழுவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க தரப்பை கைாயளும் விடயத்திலும் கூட, தமிழ்த் தரப்பு இன்னமும் தெளிவான நிலையில் இல்லை என்றே கூறலாம். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச தலையீடு தேவை, சர்வதேச விசாரணையின் மூலமே நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் தமிழர் தரப்பு, சர்வதேசத்துடனான உறவுகளை பலமாக வைத்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

ஆனால், அமெரிக்கா வரவேண்டும், ஐரோப்பிய ஒன்றியம் வரவேண்டும், ஐ.நா தலையிட வேண்டும் என்று குரல் எழுப்பத் தெரிந்தாலும், அந்த தரப்புகளை கையாளுவதற்கான வழிமுறைகளை கண்டறிந்து கொள்வது தமிழர் தரப்பு இன்னமும், பாலர்வகுப்பில் தான் இருக்கிறது. சர்வதேச தரப்புகள் தமக்கென சில வரையறைகளை, வைத்திருக்கும். அந்த வரையறைகளை விட்டு விலகுவதற்குத் தயாராக இருக்காது. ஆனாலும், அவ்வாறான வரையறைகளை உடைத்துக் கொண்டு செல்லும் சில “வெளிகள்” அல்லது “ஓட்டை”களும் இருக்கத் தான் செய்யும். உதாரணத்துக்கு, இலங்கைதன்னை நடுநிலை நாடு என்றும், அணிசேரா கொள்கையையே, கடைப்பிடிப்பதாகவும் கூறுகிறது.

ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை. இலங்கையிடம் பல பலவீனங்கள் உள்ளன. அந்த பலவீனங்களைப் பயன்படுத்தியே சீனா தன் பக்கம் இலங்கையைசாய்த்து வைத்திருக்கிறது. அதுபோல, இலங்கையை சாய்க்க, அமெரிக்கா முயன்ற போதும் அது சாத்தியப்படவில்லை. ஆக, எல்லா “வெளி“களும், எல்லா நேரத்திலும், எல்லா தரப்பாலும் பயன்படுத்திக் கொள்வதற்குப் பொருத்தமானதாக இருக்காது.

இது சர்வதேச தரப்புகளை கையாள முனையும் போது தமிழர் தரப்பினால் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவிடயம். ஆனால், தமிழர் தரப்பு வெறும் அறிக்கைகளுக்கு அப்பால், தமது பிரச்சினைகளை சர்வதேசத்திடம் கொண்டு செல்ல எந்தளவுக்கு கரிசனை எடுத்துக் கொண்டுள்ளது என்றகேள்வி உள்ளது. இப்போது, அமெரிக்காவில் ஒரு புதிய சூழல் உருவாகியிருக்கிறது. ஒப்பீட்டளவில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தியது என்று கருதப்படக்கூடிய, ஜனநாயக கட்சி அங்கு ஆட்சிக்கு வரவுள்ளது. ஜோ பைடனின் வெற்றியின் மூலம், அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலாஹரிஸ் பதவியேற்கவுள்ளார். அவர் தமிழகத்தைப் பூர்வீகமாக கொண்ட ஒருவர். தமிழக- ஆபிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அவர் மீது, இப்போது பலரும்பெரியளவில் நம்பிக்கை வைக்கத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது.

பிறப்பினால் ஒரு பாதி தமிழராக- தாயின் வளர்ப்பின் மூலம், முழுத் தமிழராகவே அவர் இருப்பது தமிழர்களைப் பொறுத்தவரை பெருமைக்குரிய விடயம் தான். ஆனாலும் தமிழே தெரியாத, தமிழே எழுதப்படிக்கத்தெரியாத கமலாஹரிஸை, தமிழர் தரப்பு எவ்வாறு கையாளப் போகிறது- அல்லது கையாள முனையப் போகிறது? அது மட்டுமல்ல, கமலாஹரிஸின் தலைமை அதிகாரியாக – அவரதுஆலோசகராக இருப்பவர் ஒரு யாழ்ப்பாண பூர்வீகமாககொண்ட தமிழ்ப் பெண் தான். ரோகினி லக்ஷ்மி என்ற அந்தப் பெண்ணே,  கமலா ஹரிஸ் துணை ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதும் அவரது தலைமை அதிகாரியாக- ஆலோசகராக செயற்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறான ஒரு சாதகமான நிலை, இதற்கு முன்னொருபோதும், தமிழர்தரப்புக்கு வாய்த்ததில்லை. அதுபோல, அமெரிக்க அரசாங்கத்தின் இன்னொரு சாதகமான திருப்பமும் எதிர்பார்க்கப்படுகிறது. இராஜாங்கச் செயலர் பதவிக்கான போட்டியில், சூசன் ரைஸ் முன்னிலை வகிக்கிறார். இவர், ஏற்கனவே வெள்ளை மாளிகையில் இருந்து இலங்கையின் போர்க்குற்றங்களுக்கான நீதி விவகாரங்களைக் கையாண்ட ஒருவர். இலங்கை தொடர்பான- தொடர்ச்சியாக கவனத்தைக் கொண்டிருக்கின்ற ஒருவர்தான் சூசன்ரைஸ். இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை ஜெனிவாவில் கொண்டு வருவதற்கும், இவர் காரணமாக இருந்தவர். இவ்வாறான ஒருவர், அமெரிக்க இராஜாங்கச் செயலராகப் பதவியேற்பதும் கூட, சாதகமானஒருவிடயம்தான்.

தமிழர் அல்லது தமிழருடன் தொடர்பில் உள்ளவர் என்ற வகையில், இந்த மூவரும் அமெரிக்க அரசியலில் தீர்க்கமான பங்கை வகிக்கப் போகின்றனர். இவர்களை தமிழர் தரப்பு கையாளுவதற்கு ஒரு சாதகமான சூழல் உள்ளது. இவர்கள் தமிழராக இருப்பதால், தமது அதிகாரத்தைக் கொண்டு,  பெரிதான எதையும் செய்து விட முடியாது. அவ்வாறுசெய்யமுடியும்என்றோ, செய்யவேண்டும் என்றோ எதிர்பார்ப்பது முட்டாள்தனம். அமெரிக்காவின் பிரதான வெளியுறவுக் கொள்கையைக் கடந்து - தனிப்பட்ட முறையில் அவர்களால் பெரிதாக எதையும் செய்ய முடியாது. ஆனால், அமெரிக்காவின் உயர் மட்டத்தை மிக எளிதாக தொடர்பு கொள்வதற்கு அதன் கவனத்தைஈர்ப்பதற்கு, ஒரு சுலபமான வழி கிடைத்திருக்கிறது.

இந்த தொடர்புகளைகண்டறித்து- வலுப்படுத்தி, அமெரிக்கதரப்புடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது இப்போதைய தருணத்தில் முக்கியமானது. இவ்வாறானநெருக்கத்தின் மூலம், சர்வதேச அளவில், தமிழர் தரப்பின் நிலையை வலுப்படுத்திக் கொள்வதற்கும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்குச் சாதகமான சூழலை உருவாக்கிக் கொள்வதற்கும், வாய்ப்பைஏற்படுத்தும். இந்தியாவில், தமிழகத்தில் தமிழர்கள் பலர், உச்ச அதிகாரத்தில் இருந்தும், எதையும் செய்யவில்லை என்று, தமிழர் தரப்பில்பலரும் குறையாக முன்வைப்பதுண்டு. இவ்வாறான அணுகுமுறை தவறானது. அவர்களால், நாட்டின் கொள்கைக்கு அப்பால் செயற்பட முடியாது. இப்போது, கமலா ஹரிஸ், அவரது ஆலோசகர் ரோகினிலஷ்மி, சூசன் ரைஸ் போன்றவர்களையும், அவ்வாறானகண்ணோட்டத்தில்- அணுகமுற்படாமல், மிகவும் கவனமாக அணுக முற்படவேண்டும்.

இந்தப்சூழல் ஒட்டுமொத்த நிலைமைகளையும் மாற்றிவிடும் என்றில்லை, ஆனாலும், இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், அவ்வாறான ஒருமாற்றத்துக்கு, வழியமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு தமிழர்தரப்புக்கு கிட்டினாலும் ஆச்சரியமில்லை.

-கபில் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22