“ஜோ பைடனின் 46 ஆண்டுகால, பாரம்பரிய  அரசியலுக்கு முன்னால், ட்ரம்பினால் தாக்குப்பிடிக்க முடியாமல் போயிருக்கிறது”

 “அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்றும், அமெரிக்காவின் வளங்கள், அமெரிக்கர்களுக்கே என்றும், கூறிக்கொண்டு அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்த, ட்ரம்பின் தீவிர வலதுசாரி அரசியல் நான்கு ஆண்டுகளில் தோல்வியைச் சந்தித்திருக்கிறது”

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபைடனின் வெற்றியை விட, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தோல்விக்குத் தான் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ட்ரம்பின் தோல்வி, இந்தியாவுக்கும்,  உலகத்துக்கும் நல்லது என்று பி.பி.சி.க்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றில் கூறியிருக்கிறார் “தி ஹிந்து“ குழுமத்தைச் சேர்ந்த என்.ராம்.ட்ரம்பின் தோல்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்க்கிறார்கள். அதன்மூலம் ஏற்படக் கூடிய மாற்றங்களையும், விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறார்கள். அதனை அடிப்படையாக வைத்தே, இந்த தோல்வியின் விளைவு பற்றி முடிவு செய்கிறார்கள். ட்ரம்பி தோல்வி தீவிர வலதுசாரி அரசியலின் தோல்வியாகவும் இன்னொரு தரப்பினரால் பார்க்கப்படுகிறது. ஜேர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்குப் பிறகு, உலகில் பல தீவிர வலதுசாரிகள் அவ்வப்போது தோற்றம் பெற்றிருந்தாலும்,  ட்ரம்ப் தான், அண்மைக்காலங்களில் மிகத் தீவிரமான வலதுசாரியாக அடையாளப்படுத்தப்பட்டு வந்தவர்.

வெளிப்படையாகவே,  கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை முன்வைத்து, தன்னை ஒரு தூய வெள்ளையின தலைவராக வெளிப்படுத்தியவர் அவர். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்றும், அமெரிக்காவின் வளங்கள், அமெரிக்கர்களுக்கே என்றும், கூறிக்கொண்டு அசுர பலத்தோடு ஆட்சிக்கு வந்த ட்ரம்ப், இப்போது, ஆட்சியை விட்டு வெளியேறும் கட்டத்துக்கு வந்திருக்கிறார். நான்கு ஆண்டுகளில், ட்ரம்பின் தீவிர வலதுசாரி அரசியல் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்த தோல்வி, உலகத்துக்கு,  நல்லது என்று என்.ராம் போன்றவர்கள் கூறுகின்ற நிலையில், இந்த தோல்வி என்ன பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

2016இல் ட்ரம்பின் வெற்றி, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் தீவிர வலதுசாரிக் கொள்கையுள்ளவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு தூண்டுகோலாக அமைந்தது என்பதில் ஆச்சரியமில்லை. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பல சந்தர்ப்பங்களில் தனக்கான முன்னோடியாக ட்ரம்பைத் தான் அடையாளம் காட்டியிருந்தார். அமெரிக்காவின் வளங்கள் அமெரிக்காவுக்கே என்ற தீவிர தேசியவாத நிலைப்பாட்டையும், பாரம்பரிய அரசியல்வாதிகளை மக்கள் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்,  என்பதையும், முன்னிறுத்தியே கோட்டாபய ராஜபக்ஷ தனது அரசியல் வியூகத்தை வகுத்துக் கொண்டிருந்தார்.

இலங்கை சிங்கள நாடு என்றும், அது சிங்கள பௌத்தர்களுக்கே உரியது என்பதையும் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கூட,  தெளிவாக கூறியிருக்கிறார்.

அதுபோலத் தான், பாரம்பரிய அரசியல்வாதிகளுக்குப் புறம்பான ஒருவராக தன்னை அடையாளப்படுத்தியே வெற்றியையும் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் இதுபோல, ட்ரம்ப் ஏற்படுத்திய அந்த அலை இப்போது ஓய்வுக்கு வந்திருக்கிறது. ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட தீவிரமான தேசியவாதம் அங்கு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. அதுபோல, ஜோ பைடனின் 46 ஆண்டுகால, பாரம்பரிய  அரசியலுக்கு முன்னால், ட்ரம்பினால் தாக்குப்பிடிக்க முடியாமல் போயிருக்கிறது. எனவே, தீவிர வலதுசாரிக் கொள்கை, தேசியவாதம் என்பன, தோற்கடிக்கப்பட முடியாதளவுக்கு உலகத்தில் எழுச்சி பெற்றிருக்கிறது என்ற மாயை உடைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்து தோன்றுவதற்கு அமெரிக்காவே காரணம், ட்ரம்ப் தான் அதனை உருவாக்கியவர். அதே ட்ரம்பின் மூலம் தான், அந்த மாயை உடைக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை, இன்னொரு பதவிக்காலத்துக்கு ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டிருந்தால், அந்த மாயை நிரந்தரமானதாக மாறியிருக்கும். அதனை இலகுவாக தோற்கடிக்க முடியாமலும் போயிருக்கும்.

ஏனென்றால், ட்ரம்ப்பை அரசியல் ரீதியாக தோற்கடிக்க இருந்த ஒரே வாய்ப்பு 2020 ஜனாதிபதி தேர்தல் தான். அந்த வாய்ப்பை அமெரிக்க மக்கள் சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இதன் மூலம், அவர்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், தீவிர வலதுசாரி- மற்றும் தேசியவாதம் தொடர்பாக உலகத்துக்கு கற்றுக்கொடுத்த பாடத்தை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே, மரபுசாரா அரசியல்வாதிகள் என்ற கவர்ச்சி, நீண்டகாலத்துக்கு நிலைத்திருக்க முடியாது என்பதையும் ட்ரம்பின் தோல்வி உணர்த்தியிருக்கிறது. ட்ரம்ப் தனக்கு கிடைத்த பதவியை, சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, கோமாளித்தனமாக நடந்து கொண்டார்,  நாடுகளுடனான உறவுகள் விடயத்தில் சில இடங்களில் தேவையின்றி உணர்ச்சி வசப்பட்டார், கொந்தளிக்க வேண்டிய சில சந்தர்ப்பங்களில், அமைதி காத்தார்.

ஆக அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரின் திணறலையும் அமெரிக்கா நான்கு ஆண்டுகளில் பார்த்து விட்டது. இந்த தோல்வி, ட்ரம்பின் வெற்றியை முன்னுதாரணமாக கொண்ட தலைவர்களுக்கும் நாடுகளுக்கும் பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுக்களுக்குப் பின்னர், வெளிப்படுத்தியிருந்த கருத்தை கவனிக்க வேண்டும். ஜனாதிபதிதேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், அனைத்து மக்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன் என்று கோட்டாபய ராஜபக்ஷ வாக்குறுதி அளித்திருந்தார்.  அந்த வாக்குறுதிப்படி அவர் நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று மைக் பொம்பியோ குறிப்பிட்டிருந்தார். பொம்பியோ இனி அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருக்க முடியாது, ஆனாலும், அவர் கூறிய அமெரிக்காவின் அந்த நிலைப்பாட்டை இலகுவாக தட்டிக்கழிக்கப்பட முடியாதது என்பதில் மாற்றுக கருத்துக்கு இடமில்லை.

கிட்டத்தட்ட அதனை ஒரு வாக்குறுதியாகத் தான் அமெரிக்கா பார்க்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கூறப்பட்ட இந்த அறிவுரையை, ட்ரம்ப் கடைப்பிடித்திருக்கவில்லை என்பது அனைவருக்கும்  தெரியும்.  அவர் ஒரு வெள்ளையின மக்களின் ஜனாதிபதியாக, பிரதிநிதியாகவே நடந்து கொண்டார். அது, அவரை அமெரிக்காவின் சிறுபான்மையின மக்களிடம் இருந்து ஒதுக்கியது- ஓரம் கட்டியது. இது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய பாடம். ட்ரம்ப்பை முன்னுதாரணமாக கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசியலை, ஏற்கனவே சிறுபான்மையின மக்கள் தமது வாக்குகளால் நிராகரித்து விட்டார்கள்.

அவர்களில் பெரும்பான்மையினர், ஜனாதிபதித் தேர்தலில் அவரை ஆதரிக்கவில்லை. அதனால் தான் அவர், தன்னை சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவான ஜனாதிபதி என்று கூறிவந்தார். ஆனாலும், அவர், தான் எல்லா மக்களுக்குமான ஜனாதிபதியாக தன்னைக் கூறிக் கொண்டிருந்தார்.அந்த வாக்குறுதி தான் காப்பாற்றப்படவில்லை என்பதை பொம்பியோ நினைவுபடுத்திச் சென்றிருந்தார். இந்த நிலையில்,இன்னும் நான்கு ஆண்டு பதவிக்காலத்தை மட்டும் கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்ந்தும் ட்ரம்பையே முன்னுதாரணமாக கொண்டு செயற்படப் போகிறாரா அல்லது தனக்கென தனியான பாதையை வகுத்துக் கொள்ளப் போகிறாரா என்பது விரைவிலேயே தெரிந்து விடும். இந்தச் சந்தர்ப்பத்தில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜே பைடனுக்கு வாழ்த்து தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முகநூலில் இட்டுள்ள பதிவு கவனத்தை ஈர்க்கிறது.

“மன்னர்கள் பைத்தியக்காரர்களாக மாறும்போது, ஜனநாயகமே, மக்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்பதை, அமெரிக்கா உலகத்துக்கு நிரூபித்துள்ளது” என்று, அந்தப் பதிவில் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்தை அவர் பதிவிட்டது அமெரிக்காவை மட்டும் மனதில் கொண்டு அல்ல, இலங்கையையும், கவனத்தில் கொண்டு தான் என்பதை, இங்கு கூறித் தெரியவேண்டியதில்லை.

-கார்வண்ணன்