இம் மாத தொடக்கத்தில் காபூல் பல்கலைக்கழகம் மீது தாக்குதல் மேற்கொண்டு பலரின் உயிரிழப்புக்கு காரணமான முக்கிய சூத்திரதாரியை கைதுசெய்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் 2 ஆம் திகதி மூன்று துப்பாக்கித் தாரிகள் காபூல் பல்கலைக்கழகத்தில் மூர்க்கத் தனமான துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு 22 பேரை படுகொலை செய்தனர்.

அத்துடன் இந்த அனர்த்தம் காரணமாக மேலும் 27 பேர் காயமடைந்தும் இருந்தனர்.

இந் நிலையில் காபூல் பல்கலைக்கழக தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக துணை ஜனாதிபதி அம்ருல்லா சலே தனது பேஸ்புக் பக்கத்தில் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய மூன்று பேரும் கொல்லப்பட்ட பின்னர் நிறைவடைந்த இந்த தாக்குதலுக்கு திட்டமிட்ட சூத்திரதாரியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் ஆப்பானிஸ்தான் மற்றும் தலிபானுக்கிடையில் சமாதனாத்தை ஏற்படுத்த பல பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நடைபெற்று முடிவடைந்த நிலையிலும் அங்கு தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.