ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களுக்கு,
ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து முடிவுகளும் தெளிவாக தெரிந்து இரு வாரங்கள் கடந்துவிட்ட நிலையிலும், நீங்கள் முடிவுகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக்கொண்டு வெள்ளை மாளிகையில் சுமுகமான அதிகார கைமாற்றத்துக்கு வழிவிடுமாறு உங்களை மனைவியும் பிள்ளைகளும் மருமக்களும் கேட்டும் கூட நீங்கள் இன்னமும் மனம்மாறவில்லை. மனைவி உங்களை விவாகரத்துச் செய்வதற்குக் கூட உத்தேசிப்பதாக செய்திகள் வெளியாகின்றன.மனைவி போனாலும் பரவாயில்லை, கௌரவமாக தோல்வியை ஒத்துக்கொண்டு விட்டுக்கொடுக்காமல் இருக்க தீர்மானித்திருக்கிறீர்கள் போலும்.வெள்ளை மாளிகையில் இன்னமும் நீங்கள் பத்து வாரங்களுக்கு இருக்கமுடியும்.அந்த காலகட்டத்தில் உங்களால் இயன்ற அளவுக்கு பைடனின் அணிக்கு நெருக்கடியை கொடுக்கக்கூடியதாக சில காரியங்களை நீங்கள் செய்வதற்கு உறுதிபூண்டிருக்கிறீர்கள் போலும். அமெரிக்க மக்கள் உங்களின் முரட்டுத்தனமாக பிடிவாதத்தை எத்தனை நாட்களுக்கு சகித்துக்கொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை.
நவம்பர் 3 ஜனாதிபதி தேர்தல்தான் அமெரிக்காவின் வரலாற்றிலேயே மிகவும் மோசடிகள் நிறைந்த தேர்தல் என்று பதவியில் இருக்கும் ஜனாதிபதியாகிய நீங்களே கூறியிருக்கிறீர்கள். இந்த தேர்தல் மோசடித்தனமானதோ இல்லையோ அது வேறுவிடயம்.ஆனால், தனது பதவிக்காலத்தில் நடந்த தேர்தல் ஒன்றை நாட்டின் வரலாற்றிலேயே மிகவும் முறைகேடுகள் நிறைந்தது என்று குற்றஞ்சாட்டியிருக்கக் கூடிய முதல் அமெரிக்க ஜனாதிபதியாக நீங்களே பெரும்பாலும் இருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.
உலகில் உங்களை பெரிதும் வெறுக்கக்கூடிய தலைவர்களில் ஒருவராக ஈரானிய அதியுயர் தலைவர் அயத்தொல்லா அலி காமெனியைக் நிச்சயமாகக் கூறமுடியும். ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான நாட்களில் அமெரிக்காவில் இடம்பெற்றுவந்திருக்கும் நிகழ்வுப்போக்குகளைப் பற்றி அவர் குறிப்பிடுகையில், ஆகா என்ன கண்கொள்ளாக் காட்சி ' என்று கேலிசெய்ததை நீங்கள் அறிந்தீர்களோ தெரியவில்லை. உலகிற்கு ஜனநாயகக் கோட்பாடுகளின் அவசியம் பற்றி பிரசங்கம் செய்கின்ற அமெரிக்கர்கள் தங்களது நாட்டில் ஜனநாயகத்தை என்னபாடு படுத்துகிறார்கள் பாருங்கள் என்று எல்லோரும் பரிகாசம் செய்கிறார்கள்.
வாக்களிப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே நிலைவரங்களை புரிந்துகொண்ட நீங்கள் தேர்தல் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்று ஏற்கனவே கூறினீர்கள்.வாக்குகளை எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் மோசடிகள் குறித்து உரக்கப்பேசினீர்கள்.மோசடிக் குற்றச்சாட்டை தொடர்ந்து சுமத்திக்கொண்டிருந்த போதிலும், அதற்கான ஆதாரம் எதனையும் நீங்கள் முன்வைக்கவில்லை.ஆதாரங்களை முன்வைக்காமல் வாக்களிப்பில் மோசடிகள் இடம்பெற்றதாகக் கூறிக்கொண்டு தேர்தல் முடிவுகளை பதவியில் இருக்கும் ஜனாதிபதியொருவர் ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது அமெரிக்காவின் வரலாற்றில் பிரத்தியேகமான ஒரு அத்தியாயமாகும் என்று ஊடகங்கள் வர்ணித்திருக்கின்றன. வெளியுலகில் அமெரிக்காவின் படிமத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு புதிய தாழ்வாகவே இதை கூறவேண்டும்.
உலக நாடுகளில் ஜனநாயகத்தை மேம்படுத்துவதற்கு பாடுபடுவதாகக் கூறிக்கொண்டு அமெரிக்கா செய்துவருகின்ற இரண்டகமானதும் பாசாங்குத்தனமானதுமான காரியங்கயைும் கடைப்பிடிக்கின்ற அணுகுமுறைகளையும் பற்றி எங்களுக்கு எந்தவிதமான மருட்சியும் கிடையாது.ஆனால், தேர்தல் முடிவுகள் தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்து நீங்கள் செய்வதைப்போன்று வேறு நாடுகளின் குறிப்பாக , மூன்றாம் உலக நாடுகளின் தலைவர் எவராவது நடந்துகொண்டிருந்தால், அமெரிக்கா எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த வேளையில், உங்களை விடவும் கூடுதலான தேர்தல் மன்ற வாக்குகளை பைடன் பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று நீங்கள் அறிவித்ததையடுத்து ' மக்களின் ஜனநாயக தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு ட்ரம்ப் மறுப்பதை கண்டித்து சிம்பாப்வே வொஷிங்டனுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆராய்கிறது ' என்று முகநூலில் ஒரு பதிவொன்றைச் செய்திருந்தார்.அந்த பதிவின் பின்னணியில் இருக்கும் ஏளனம் யதார்த்தநிலைவரத்தை பிரகாசமாக வெளிக்காட்டியது.ஊருக்குத்தான் உபதேசம், உனக்கல்லடி என்ற கதைதான்.
எது எவ்வாறிருந்தாலும், உங்களது பதவிக்காலத்தின் இறுதி நாட்கள் தொடங்கிவிட்டன என்பது தான் உண்மை.ஜனாதிபதியாகவும் துணை ஜனாதிபதியாகவும் தெரிவாகியிருக்கும் ஜோ பைடனும் கமலா ஹரிஸும் தங்களது நிருவாகத்தை அமைக்கும் பூர்வாங்கப் பணிகளை ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆனால், அவர்களது அந்தப் பணிகளுக்கு சாத்தியமானளவு இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு நீங்கள் வெள்ளைமாளிகையில் இருந்ததுண்டு முயற்சிப்பீர்கள் என்றும் தெரிகிறது.தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உங்களின் பிரசாரப்பணியகம் தேர்தல் போட்டி மிகவும் நெருக்கமானதாக இருந்த மாநிலங்களில் பெருவாரியான வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கிறது.முறைகேடுகள் இடம்பெற்றதாக உருப்படியான எந்தவொரு சான்றும் முன்வைக்கப்படாத பட்சத்தில் அந்த வழக்குகளில் முன்னேற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை.இது உங்களுக்கு தெரியாததுமல்ல.ஆனால், பைடன் -- ஹரிஸ் நிருவாகம் பதவியேற்பதை எந்தளவுக்கு தாமதிக்கமுடியுமோ அதை நீங்கள் செய்வீர்கள் என்று தெரிகிறது.
எது எவ்வாறிருந்தாலும், ஒரு உண்மையை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நடந்துமுடிந்த தேர்தல் உங்களை முற்றாக நிராகரித்துவிட்டதாக கூறிவிடமுடியாது.
ஜனநாயகக் கட்சிக்காரர்களும் கருத்துக்கணிப்புகள் பலவும் எதிர்பார்த்ததைப் போன்று பைடனுக்கு பிரமாண்டமான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.முன்னெப்போதையும் விடவும் இந்த தேர்தலில் அமெரிக்க மக்கள் பெரும் எண்ணிக்கையில் வாக்களித்திருக்கிறார்கள். பைடனுக்கு சுமார் 7 கோடியே 50 இலட்சம் வாக்குகள் கிடைத்திருக்கி்றன.ஆனால், 2016 தேர்தலில் பெற்றதையும் விட நீங்கள் கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறீர்கள். அப்போது 6 கோடியே 30 இலட்சம் வாக்குகளைப் பெற்ற நீங்கள் இத்தடவை 7 கோடியே 6 இலட்சம் வாக்குகளைக் கைப்பற்றியிருக்கிறீர்கள். அதனால், நீங்கள் விரைவில் ஜனாதிபதியாக இல்லாமல் போனாலும், உங்களது கோட்பாடு தற்போதைக்கு அமெரிக்காவில் ஒரு அரசியல் சக்தியாக நிலைத்திருக்கவே போகிறது என்பதையே இது காட்டுகிறது.
2016 ஆம் ஆண்டில் இருந்து நீங்கள் கடைப்பிடித்துவந்திருக்கும் ' அமெரிக்கா முதலில் ' என்ற அணுகுமுறை ' ட்ரம்பிசம் ' ( Trumpism ) என்ற ஒரு கோட்பாடாக அரசியல் அகராதியில் புகுந்துவிட்டது. பாரம்பரியமாக நிலைநாட்டப்பட அரசியல் விழுமியங்களின் பிரகாரம் செயற்படாமல் வலதுசாரி பழமைவாத -- தேசியவாத ஜனரஞ்சக உணர்வுகளின் அடிப்படையில் நீங்கள் கடைப்பிடித்த ஒருதலைப்பட்ச சிந்தனையை எதேச்சாதிகார ஆட்சிமுறையில் நாட்டம் கொண்ட வேறுபல நாடுகளின் ஆட்சியாளர்களும் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள். பாரம்பரியமான அரசியல்வாதிகளை மக்கள் இப்போது வெறுக்கிறார்கள் என்று அவர்கள் தங்களது சிந்தனைக்கு அவர்கள் ஒரு நியாயத்தையும் கற்பிக்கிறார்கள். சமூகத்தின் பன்முகத்தன்மையை நிராகரித்து தேசியவாதம், மதம் மற்றும் இனத்தை மூன்று தூண்களாகக்கொண்டதே உங்களது கோட்பாடு. இது மிகவும் ஆபத்தான ஒரு கலவையாகும். சிக்கலான அரசியல், பொருளாதார மற்றும் சமூகப்பிரச்சினைகளுக்கு வெறுமனே தேசியவாத தீர்வுகளை பரிந்துரைக்கின்ற உங்கள் பெயரிலான அந்த கோட்பாடு எமது நாட்டிலும் இப்போது வேரூன்றிவருகிறது.சமூகங்களைப் பிளவுபடுத்துகின்ற இந்த கேட்பாடு பழைய இனவாத தோலை கழற்றிவிட்டு புதியதொரு ஜனரஞ்சக அரசியலாக ( Populism) மாறுவேடம் பூண்டிருக்கிறது. உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோட்டைக்கூட மழுங்கச்செய்து பொய்க்கு ' மாற்று உண்மை (Alternate Truth) என்ற ஒரு நாமத்தை உங்கள் கோட்பாடு கொடுத்திருக்கிறது. இதுவே உங்கள் மரபாக இருக்கப்போகிறது என்றால், வரலாற்றில் உங்கள் பாத்திரம் நிச்சயமாக எதிர்மறையானதேயாகும்.
உங்கள் அரசியல் வாழ்வில் நியாயபூர்வமான எதற்குமே நீங்கள் முன்னுதாரணமாக காட்டக்கூடிய ஒரு பாத்திரத்தை வகிக்கவில்லை. நிதானமாகச் சிந்திக்கவும் உங்களுக்கு தெரிந்திருக்கவில்லை.ஏறுமாறாகப் பேசுகின்ற தர்க்க நியாயங்களுக்கு பொருந்தாத ஒரு ஜனாதிபதிக்கு உதாரணமாகத்தான் உங்களை காண்பிக்கமுடியும். அமெரிக்கா முதலில் என்று கூறிக்கொண்டு வெள்ளைமாளிகைக்குள் பிரவேசித்த நீங்கள் இத்தடவை தேர்தலில் ' வெள்ளை அமெரிக்கா ' பற்றி பேசினீர்கள்.அமெரிக்க சமூகத்தின் பிளவுகள் மீதே உங்கள் கோட்டையைக் கட்ட முயற்சித்தீர்கள். ஆனால், அரசியல் அதிகாரத்தின் சக்தியை விடவும் வரலாற்று விதிகள் பலமானவை என்பதை உங்களுக்கு நேர்ந்த கதி மீண்டும் ஒரு தடவை நிரூபித்திருக்கிறது.
பதவியில் இருந்தவேளையில் இரண்டாவத பதவிக்காலத்துக்கு தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட 11 வது அமெரிக்க ஜனாதிபதி நீங்கள். தனக்கு ஏற்பட்ட தேர்தல் தோல்வியை கண்ணியமாக ஏற்றுக்கொண்டு சுமுகமான அதிகார மாற்றத்துக்கு வழிவிடாமல் வெள்ளைமாளிகையில் இருந்து இழுத்து வெளியேற்றப்பட்ட முதலாவது ஜனாதிபதி என்ற அபகீர்த்தியைச் சம்பாதிக்காமல் வீடு செல்வதே விவேகமான செயல்.
இப்படிக்கு
ஊர்சுற்றி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM