(செ.தேன்மொழி)

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை தொடர்பில் இதுவரையில் 201 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிடடுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஆள்நடமாட்டம் தொடர்பில், கண்காணிப்பதற்காக விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் ட்ரோன் கெமராக்களின் ஊடாக கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. 

அதற்கமைய கடந்த வியாழக்கிழமை 15 பேரும் ,நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 7பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் இது தொடர்பில் இதுவரையில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதிகளில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் வைத்திய சிகிச்சைகளுக்காக மாத்திரமே பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமூக இடைவெளி பேணாமை மற்றும் முகக்கவசம் அணியாமை தொடர்பில் நேற்று சனிக்கிழமை மாத்திரம் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது நீர்கொழும்பு, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய பகுதிகளிலேயே அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அதற்கமைய இதுவரையில் இந்த சட்டவிதிகளை மீறியதாக  201 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேல்மாகாணத்திலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர்  மாத்திரம்  மேல்மாகாணத்திற்குள் அனுமதிக்கப்படுவதுடன், ஏனைவர்கள் மேல் மாகாணத்திற்குள் வருவதற்கோ அல்லது இங்கிருந்து வெளியேறுவதற்கோ அனுமதி வழங்கப்படமாட்டாது.