(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் கொவிட் -19 நிலைமைகளை காரணம் காட்டி வடக்கு கிழக்கில் மாவீரர்களை நினைவுகூரும்  நிகழ்வுகளை தடுக்க சூழ்சிகள் இடம்பெற்று வருகின்றது. எனினும் எமது மக்கள் யுத்தத்தில் உயிரிழந்த மாவீர்களை நினைவுகூர அரசாங்கம் இடமளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக பாராளுமன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  நாட்டின் கொவிட் -19 நிலைமைகள் குறித்து பிரதான எதிர்க்கட்சி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போதே அவர் இந்த காரணிகளை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

பொது சுகாதார அவசர நிலைமைகளை கையாளக்கூடிய போதுமான சட்டங்கள் இல்லை, நாம் இன்னமும் காலாவதியான தனிமைப்படுத்தல் சட்டங்களை கொண்டே நிலைமைகளை கையாண்டு வருகின்றோம். இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு என்னவென்றால், இந்த நாட்டில் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டமாகும். பல சந்தர்ப்பங்களில் இதனை நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.  அதே போல் மார்ச் மாதத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றினையும் நான் சபையில் முன்வைத்தேன். அதில் குறித்த சட்ட ஏற்பாடுகள் குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தேன், எனினும் எட்டு மாதங்களாகியும் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.

இது குறித்து கடந்த மே மாதம் 3 ஆம் திகதி, மனித உரிமைகள் ஆணையகத்திற்கு சில காரணிகளை முன்வைத்தேன். குறிப்பாக இவ்வாறான நெருக்கடி நிலைமைகளில் நாட்டினை முடக்குவதன் அவசியம் குறித்தும் அவ்வாறான செயற்பாடுகளில் நெருக்கடிகளை சமாளிக்க எம்மிடம் போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன். அதேபோல் ஜூன் மாதம் 8 ஆம் திகதி, மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி செயலாளருக்கு இது குறித்த கடிதம் ஒன்றினை அனுப்பினர், அதன் பிரதியொன்றும் அவர்களின் பரிந்துரைகளையும் எனக்கும் அனுப்பிவைத்தனர். இந்த கடிதத்தில் என்ன உள்ளதென்றால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட பூர்வமற்றது என தெரிவித்துள்ளனர். இப்போது காலம் கடந்துள்ளது, இன்று கொவிட் நிலைமைகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் சகல விடயங்களும் சட்ட பூர்வமற்றது என்பதே உண்மையாகும்.

இந்த விடயத்தில் வெறுமனே அரசியல் நோக்கங்களை மாத்திரம் சாதகமாக்கிக்கொள்ளாது, அல்லது அரசியல் சுயநலங்களை தேடிக்கொள்ளாது, தயவுசெய்து நாட்டின் நலனுக்காக செயற்பட்டாக வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எனினும் இப்பொது வரையிலும் அரசாங்கம் இந்த விடயத்தை தவறாகவே கையாண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் முதல் அலை உருவாகிய வேளையில் அரசாங்கம் உடனடியாக தேர்தலுக்கு சாதகமாக இதனை பயன்படுத்திக்கொண்டது, இப்போது இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில் இதனை சாதகமாக வைத்துகொண்டு 20 ஆம் திருத்த சட்டத்தை நிறைவேற்றுக்கொள்ள நடவைக்கை எடுத்தனர். ஆனால் இவற்றையும் தாண்டிய மிக மோசமான நிலைமை ஒன்றில் நாடு சிக்கிக்கொண்டுள்ளது என்பதே உண்மையாகும். இதனை கருத்தில் கொண்டு அரசாங்கம் சரியான பாதைக்கு வரவேண்டும்.