(க.பிரசன்னா)

இலங்கையில் சேகரிக்கப்பட்ட முதல் மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் ஜப்பான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சுற்றாடல் அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் தபால் திணைக்களம் என்பன இணைந்து நாடு முழுவதுமுள்ள 600 தபால் நிலையங்களின் மூலமாக சேமித்த வீட்டு உபகரணங்கள் மற்றும் இலத்திரனியல் கழிவுகளே இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ள ஐ.என்.எஸ்.ஈ.ஈ. எக்கோசைக்கிள் நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

ஏற்றுமதி செய்யப்பட்ட மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளில் மூன்று தொன் அச்சிடப்பட்ட சேர்கியூட் போர்ட், எட்டு தொன் பிளாஸ்டிக் மற்றும் 13 தொன் உலோகம் ஆகியவை உள்ளடங்குகின்றன. 

இவை அனைத்தும் நாடு முழுவதிலிருந்தும் மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் வாரத்தில் பெறப்பட்டவையாகும். 

பழுதடைந்த கணினிகள் மற்றும் ஏனைய இலத்திரனியல் சாதனங்கள், வீடுகளில் சேமிக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டிகள் என்பவற்றில் மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய கன உலோகங்கள் மற்றும் இரசாயனங்கள் காணப்படுகின்றன என்பதனை பலரும் அறிவதில்லை.

தற்போது சேகரிக்கப்பட்ட மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகள் ஜப்பான் நாட்டின் ஒயுசி கன்கியோ சோஜி நிறுவனத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

ஏற்றுமதி செய்யப்பட்ட கழிவுகளில், குறிப்பாக அச்சிடப்பட்ட சேர்கியூட் போர்ட்களில் காணப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினம் என்பன ஜப்பானிய நிறுவனங்களினால் பிரித்தெடுக்கப்படவுள்ளன. 

பிரித்தெடுக்கப்படும் தங்கம் மற்றும் பிளாட்டினத்தின் பெறுமதிக்கேற்ப இலங்கைக்கு பணம் செலுத்தப்படுகின்றது. 

எதிர்வரும் காலங்களில் நாட்டில் அகற்றப்படாதுள்ள மின் மற்றும் இலத்திரனியல் கழிவுகளை அகற்றுவதற்று நடவடிக்கையெடுக்கப்படுமென சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.