விஜய் அண்டனி நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்திற்கு 'கோடியில் ஒருவன் 'என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

'ஆள்' 'மெட்ரோ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படத்திற்கு 'கோடியில் ஒருவன்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் விஜய் அண்டனி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக  நடிகை ஆத்மிகா நடிக்கிறார். 

கொரோனா காரணமாக  இடைநிறுத்தம் செய்யப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கப்பட்டு நிறைவடையும் நிலையில் இருக்கிறது. என் எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்திருக்கிறார். தீபாவளி திருநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.

விஜய் அண்டனி படத்தின் வழக்கமான ஃபார்முலாவின் படி அவருடைய  கதாபாத்திர தோற்றம் மட்டுமே இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றிருப்பதால் அவருடைய ரசிகர்கள் இதனை வரவேற்று இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.