அமெரிக்காவில் நேற்று வியாழக்கிழமை ஒரே நாளில் புதிதாக 152,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததிலிருந்து 150,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நாள் இதுவாகும். மேலும் இது ஒரு ஆபத்தான பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம்  4 ஆம் திகதி முதல் நாளாந்தம் தொடர்ச்சியாக 100,000க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றாளர்கள் பதிவு செய்யப்படுகின்றனர்.

கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை 67,096 ஆக உயர்ந்துள்ளதாக கொரோனா கண்காணிப்பு திட்டத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. 

இந்த எண்ணிக்கை தொடர்ந்து மூன்றாவது நாாளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும்  இந்த எண்ணிக்கை ஐந்து வாரங்களில் இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் நாளாந்தம் சராசரியாக ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை  மொத்தம் 10,546,706 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 242,622 பேர் உயிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.