(ஆர்.யசி. எம்.ஆர்.எம்.வஸீம்)

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் ஒரு வார்தையேனும் இல்லை. இதன் மூலம் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற 2020 ஆம் வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுமென அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது.

மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் கட்டாயம் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென சான்றிதழ் அளித்தனர். தற்போது நவம்பர் மாதமும் முடிவடையவுள்ளது. 2020ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்து ஒரு வார்த்தையேனும் இதில் இடம்பெறவில்லை.

இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் தெளிவாக ஏமாற்றப்பட்டுள்ளனர். பிரதமரால் பாராளுமன்றில் கொடுக்கப்பட்ட வாக்குறுதி அவராலே மீறப்பட்டுள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவேனும் அது தொடர்பில் ஏதாவது பிரேரணைகளையாவது முன்வைக்க  பிரதமர் முயற்சி எடுக்கவில்லை.

தேர்தலை மையப்படுத்தி தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளமையையே இவர்கள் செய்துள்ளனர். ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் தற்போது அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற  தயார் இல்லை என்பதே இவர்களின் செயற்பாடுகளில் இருந்து தெளிவாக விளங்குகிறது என்றார்.