சட்டவிரோத குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகொன்று மத்திய தரைக்கடலான லிபிய கடற்பரப்பில் விபத்துக்குள்ளானதில் ஐந்து மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.

லிபியாவின் பண்டைய நகரமான சப்ரதாவிலிருந்து 30 மைல் (48 கிலோமீட்டர்) தொலைவிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயினின் மனிதாபிமான குழு ஒன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

குறித்த படகானது இரண்டாக பிளவடைந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், 110 குடியேற்றவாசிகளை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.

புதன்கிழமை ஏற்பட்ட இந்த விபத்தானது லிபியாவின் வடக்கே உள்ள கடற்பகுதியில் இந்த வாரம் பதிவுசெய்யப்பட்ட இரணடாவது விபத்தாகும்.

செவ்வாயன்று இடம்பெற்ற படகு விபத்தொன்றில் ஒரு குழந்தை உட்பட 13 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்ததாக ஐ.நா. கூறியுள்ளது.

இப் பகுதியானது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்து குடியேறுபவர்களுக்கான முக்கிய போக்குவரத்து இடமாக அமைந்துள்ளது.

இவ் ஆண்டு இதுவரை மத்திய மத்தியதரைக் கடலில் ஐரோப்பாவை அடைய முயன்ற 575 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.