இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மரணங்கள் தொடர்ந்து பதிவாகி கொண்டிருக்கின்றன.
நேற்று வரை 46 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் பதினைந்தாம் திகதி நள்ளிரவு தொடக்கம் மேல் மாகாணத்திலிருந்து வேறு மாகாணங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி தீபாவளிப் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.
எனவே, வீட்டிலேயே பண்டிகையை கொண்டாடுவது இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமானதாக அமையும்.
மேல் மாகாணத்தில் இன்று தோன்றியுள்ள சூழலில் மக்கள் அங்கிருந்து வேறு மாகாணங்களுக்கு புறப்படுவார்களேயானால் அங்கும் தொற்றுநோய் பரவ வழி ஏற்படும்.
நேற்று மாத்திரம் ஒரே நாளில் கொள்ளுப்பிட்டி பகுதியில் 55 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை பொறுத்தமட்டில் நாட்டின் இதர பகுதிகளை விட சன நடமாட்டம் குறைந்ததுடன் சுகாதார ரீதியில் பாதுகாப்பான பிரதேசமாக கருதப்படுகின்றது.
எனினும், இப்பகுதியில் வைரஸ் தொற்று திடீரென அதிகரித்துள்ளமை பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
உலகெங்கும் பல்வேறு நாடுகளில் தற்பொழுது கொரோனா வைரஸின் இரண்டாவது, மூன்றாவது அலையின் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறானதோர் சூழ்நிலை ஏற்படலாம் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது.
அந்த வகையில் சுமார் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில ஐரோப்பிய நாடுகள் மீண்டும் முழு நேர ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளன.
குறிப்பாக பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் நோய் பரவல் தீவிரமடைந்துள்ளது.
மேலும், உலகில் இதுவரை 12 இலட்சத்து 68 ஆயிரத்து 442 பேர் நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது.
கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா காணப்படுகின்றது. அமெரிக்காவைப் பொறுத்த மட்டில் பலரும் முகக்கவசங்கள் அணிவதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் புதிதாக ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் தான் ஜனாதிபதியாக பொறுப்பேற்றவுடன் முகக்கவசத்தை அணிவதை கட்டாயமாக்கி கட்டுப்படுத்துவதற்கு முதலிடம் வழங்குவதாகவும் கூறியுள்ளார்.
ஜோ பைடன் ஜனவரியில் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இன்றைய நிலையில் தொற்றுநோய் பீடித்த நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தையும் 'பிரேசில் மூன்றாவது இடத்தையும், ரஷ்யா நான்காவது இடத்தையும், பிரான்ஸ் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதேபோல கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் பொது இடங்களில் புகை பிடித்தலுக்கு துருக்கியில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும்போது மக்கள் முகக்கவசத்தை அகற்றுவதனால் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக துருக்கி சுகாதாரத் துறை அறிவித்துள்ளது .
எனவே, இதன் அவசியம் தொடர்பில் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
தொடர்ந்தும் பலர் முகக்கவசங்களை சரியான முறையில் அணியாமல் அதனை கழுத்தில் சுற்றியவாறு சர்வசாதாரணமாக நடந்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது.
எவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு கூறினாலும், அது எந்தளவு தூரம் சாத்தியமாகும் என்று தெரியவில்லை.
பெரும்தொகையான மக்களை கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் இலகுவானதல்ல.
இதேவேளை, எதிர்வரும் வாரங்களில் அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை நீக்கி இயல்பு வாழ்க்கைக்கு வழி சமைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாகக் கடைபிடிக்க தவறினால் நிலைமை மேலும் மோசமடையும்.
எனவே நம்மையும் உலகையும் சுற்றி என்ன நடக்கின்றது? என்பதை முதலில் அறிந்து கொண்டு அதற்கேற்ப நாம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
இதேவேளை, நோய் அச்சுறுத்தல் மனிதர்களை எந்த சந்தர்ப்பத்தில் பீடிக்கின்றது என்றால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறி அலட்சியமாக இருக்கும் சந்தர்ப்பங்களிலேயே கொரோனா வைரஸ் மக்களை பீடிக்கின்றது என்பதை மறந்து போகக்கூடாது.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்