• மேல் மாகாணத்திற்கு பயணத்தடை அமுல்
  • மருதானையிலுள்ள பல்பொருள் அங்காடியிலும் தொற்று
  • 05 மரணங்கள் பதிவு

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை அண்மித்துள்ள நிலையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கையும் 46 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று மாலை 10.30 மணியளவில் 625 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 15,340 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளுடன் தொடர்புடைய தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 858 ஆக உயர்வடைந்துள்ளது. இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 10 183  பேர் குணமடைந்துள்ளதோடு ,  5113  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இன்று நாட்டில் கொரோனா தொற்று காரணமாக 5 பேர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்திருந்தது. 

இன்றைய தினம் பதிவாகிய மரணங்கள் விபரம்

  • பாணந்துரை பிரதேசத்தில் 80 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைகளின் போதே அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொவிட் தொற்றால் ஏற்பட்ட இதய பாதிப்பினால் இவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • கொழும்பு 11 பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவர் கொவிட் தொற்றாளர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றினால் ஏற்பட்ட இதய பாதிப்பின் காரணமாக இந்நபர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
  • களனி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவர் கொவிட் தொற்றாளர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த முதலாம் திகதி முதல் அம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் தொற்றினால் ஏற்பட்ட இதய பாதிப்பாகும்.
  • கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண் அவரது வீட்டில் உயிரிழந்துள்ள நிலையில், பிரேத பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தத்தம் மற்றும் மாரடைப்பு இவரது மரணத்திற்கு காரணம் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
  • இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில்,  இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் இரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவரது இறப்பிற்கு கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட சுவாசக்  கோளாறு காரணம் என அரசாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மற்றொரு பல்பொருள் அங்காடியிலும் தொற்று

கொழும்பு 10, மருதானை வீதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஊழியர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவு நேற்று  கிடைத்துள்ள நிலையில் அங்குள்ள ஊழியர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பல்பொருள் அங்காடி நிர்வாகம் அறிக்கை மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

தொற்றாளர்கள் இனங்காணப்பட்டமையால் கிருமி நீக்கல் நடவடிக்கைகளுக்காக குறித்த பல்பொருள் அங்காடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பயணத்தடை அமுல்

உடன் அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ளவர்கள் வேறு மாகாணங்களுக்கு பயணிக்க அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா  தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படும் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு பயணிப்பவர்களை  கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததையடுத்து இவ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரையில் இந்த பயணத்தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 அத்துடன் மேல்மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் மற்றும் மேல்மாகாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கும் அனைத்து பஸ் சேவைகளும் 15 ஆம் திகதி நள்ளிரவு வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.