கொரோனோ வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் “ஸ்புட்னிக்-V” தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனளிப்பதாக ரஷ்யா  இன்று தெரிவித்துள்ளது.

ரஷ்யா உலகின் முதன் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருந்த நிலையில் அதனை தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி பரிசோதனை செய்து வந்தது. 

மேலும் செய்திகள்...

இதற்கிடையே அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி இருந்தது. அது 90 சதவீத பாதுகாப்பானது என இம்மாதம் அறிவித்தது. 

இந்நிலையில் “ஸ்புட்னிக்-V” 92 சதவீத பயன் அளிக்கிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

“ஸ்புட்னிக்-V”  தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனையில் 20 ஆயிரம் பேருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டும், 14 நாட்கள் இடைவெளியில் 16 ஆயிரம் பேருக்கு இரண்டு டோஸ் கொடுக்கப்பட்டும், அதன்பின் கொரோனா தொற்றாளர்கள்  20 பேருக்கு செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள  ரஷ்யா  இதில் “ஸ்புட்னிக்-V”  தடுப்பூசி  92  சதவீதம் பயன் அளிப்பது தெரியவந்துள்ளதாக  தகவல் வெளியிட்டுள்ளது. 

ஆனால் உலக சுகாதார அமைப்பு, ரஷ்யாவின் தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பியதுடன் நம்பகத்தன்மை இல்லை எனவும் நீண்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு ஆய்வு குறிப்புகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.