(நா.தனுஜா)

எதிர்வரும் காலங்களில் பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்திசாலைகளை மேலும் ஒதுக்கீடு செய்வது குறித்து சுகாதார அமைச்சு ஆராய்ந்துவருகின்றது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் விசேட ஆராய்வுக்குழு இன்று புதன்கிழமை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கூடியதுடன் இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக உறுதிசெய்யப்பட்டுள்ள நோயாளர்களை அவர்களுடைய நோய்நிலைமையின் தீவிரத்தன்மையின் அடிப்படையில் உரிய வைத்திசாலைகளுக்கு அனுப்பிவைப்பதற்காக திட்டத்தைத் தயாரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. 

மேலும் இனிவரும் காலங்களில் பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான வைத்திசாலைகளை ஒதுக்கீடு செய்தல், கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் அதேவேளை ஏனைய நோய்கள் காரணமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு அவசியமான சிகிச்சைகளை மேலும் வலுப்படுத்தல், நோயாளர்களும் சுகாதாரப்பிரிவு ஊழியர்களும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களை உளவியல் ரீதியில் மேலும் ஸ்திரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும் இணையவழியில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுத்தல் குறித்தும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கான தயார்ப்படுத்தல்களைச் செய்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.