(செ.தேன்மொழி)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழமைப்போன்றே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு ஒலிப்பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியதாவது,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 27 பொலிஸ் பிரிவுகளும், ஐந்து கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய சேவைகளை வழமையைப் போன்றே வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இந்த பகுதிகளில் உள்ள மக்கள் எவராவது அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்களில் பணிபுரிந்தால் அவர்களுக்கு கடமைக்கு செல்ல முடியும்.

மேலும்  இந்த பகுதிகளுக்கு அவசியமான நீர்,மின் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவர்களைத் தவிர வேறு நபர்கள் எவருக்காவது இந்த பகுதிகளில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்லவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் பயணக் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு புறம்பாக செயற்பட்ட இருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கந்தானை பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருப்பவர்கள் அத்தியாவசிய தேவைகள் எதுவும் இன்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதேவேளை, கூட்டங்கள்,விழாக்கள்,விருந்துபசாரங்கள் மற்றும் நிகழ்வுகள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.