நாட்டில் கொரோனா வைரஸ் பீதி அதிகரித்து செல்கின்றது. நேற்றுவரை இந்நோயால் 41 பேர் பலியாகி உள்ளனர். 

இன்றைய நிலையில் யாருக்கெல்லாம் கொரோனா வைரஸ் நோய் உள்ளது என்பதை கண்டுகொள்ள இயலாதவாறு அது வியாபித்து போயுள்ளது.

மக்களைப் பொறுத்தமட்டில் மிகவும் எச்சரிக்கையாக உள்ளனர். எனினும் ஒருசிலர் வழமைபோன்று அலட்சியமாக உள்ளனர். 

இதனால் பாதுகாப்பாக உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. 

எனினும், அது முழுக்க முழுக்க பாதுகாப்பைத் தரும் என்று எதிர்பார்க்க முடியாது. 

ஏதாவது ஒரு வழியில் குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த சிலர் வெளியேறவே செய்வதாக கூறப்படுகிறது. இது அபாயகரமானதாகவே அமைகின்றது. 

ஏற்கனவே, கொரோனா வைரஸின் முதலாம் இரண்டாம் அலையில் சிக்கி பெரும் உயிர்ச் சேதங்களை எதிர்நோக்கிய பல்வேறு நாடுகள் அதிலிருந்தும்  மீண்டு விட்டதாக கருதிய நிலையில் மீண்டும் வைரஸின் மூன்றாம், நான்காம் கட்ட அலையில் சிக்கிக் கொண்டுள்ளன.

இதனால் வகைதொகையின்றி அங்கே பேரழிவுகள் தொடர்கின்றன.  எந்தவொரு நாடும் இந்த தொற்று நோயில் இருந்து முற்றுமுழுதாக விடுதலை பெற்றதாக இல்லை. 

அந்த வகையில் கொரோனா வைரஸ் முதலாம் இரண்டாம் அலைகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய இலங்கை அதன் மூன்றாம் அலையில் சிக்குண்டு போயுள்ளது.

அதேபோல வயதானவர்கள் இளைஞர்கள் என பேதமின்றி பலரும் உயிரிழந்தும் வருவதை அவதானிக்க முடிகின்றது.  

எவ்வாறு இருந்த போதிலும் அரசு முற்றுமுழுதாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி  மக்கள் வெளியேறுவதை கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

இதனால் நாடு பல வழிகளிலும் பாதிப்பை சந்தித்து வருகின்றது. எனவே ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தி வழமை நிலைக்கு நாட்டைக் கொண்டு வர முயற்சிக்கும் பட்சத்தில் வைரஸ் பற்றிய நிலைமை குறித்தும் சிந்திக்காமல் இருக்க முடியாது.

இதனிடையே மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றும் கிடைத்துள்ளது.

அதாவது கொரோனா வைரஸை ஒழித்துக்கட்ட கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து  வெற்றி அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் உள்ள பிஜெர் என்ற மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பையோஎன்டெக் மருந்து நிறுவனமும் தங்களுடைய மருந்தை பரிசோதித்ததில், கொரோனா வைரஸை தடுப்பதில் 90% பலன் கிடைத்துள்ளதாக அறிவித்துள்ளன.

இதுபற்றி ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களிடம் நிறுவனங்கள் ஆய்வு நடத்தி உள்ளன.  

இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாகவும் தங்களால் 130 கோடி டோஸ் மருந்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் இந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த தடுப்பு மருந்துகளை வரும் 2021ஆம் ஆண்டு இறுதி வரை 65 கோடி மக்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும் என தெரிவித்துள்ளன.  

இதேபோன்று ஜோன்சன் அண்ட் ஜோன்சன், அஸ்திரா ஜெனிகா உள்ளிட்ட மருந்து நிறுவனங்களும் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. 

ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. 

பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. 

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கும் என உலக நாடுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

எனினும் மனிதர்களிடம் அதனைப் பரிசோதித்து பார்த்ததில் இதில் பக்கவிளைவுகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் எவ்வாறான பக்க விளைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.

கொரோனா வைரஸை ஒழித்துக்கட்ட மருந்தை கண்டுபிடித்த நிறுவனங்கள் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை போக்கவும் வழி செய்யும் என நம்பலாம். 

அனைத்துக்கும் மேலாக கூடுமானவரை கொடிய வைரஸ் நம்மை அணுகாமல் இருப்பதையும் உறுதி செய்வதே மிகவும் பாதுகாப்பான நடவடிக்கையாக இருக்கும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்