(செ.தேன்மொழி)

கொழும்பு மெனிங்  சந்தையின் செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை பேலியகொட பகுதியில்  மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்  ரோஹண  தெரிவித்துள்ளார்.

கொழும்பு - புறக்கோட்டை மெனிங்சந்தையின் நாட்டாமிகளில்  சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அந்த  சந்தையின் நடவடிக்கைகள்  நிறுத்தப்பட்டதுடன் மெனிங்சந்தை  மூடப்பட்டது.

இந்நிலையில், மெனிங் சந்தையின்  நடவடிக்கைகளை   பேலியகொட பகுதியில்  மீள  ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

அந்த  வகையில், இவ்வார இறுதியில் அல்லது எதிர்வரும்  திங்கட்கிழமை குறித்த பகுதியில் மெனிங் சந்தை நடவடிக்கைகளை  ஆரம்பிப்பது தொடர்பில்  வர்த்தக சங்கங்கள் கலந்துரையாடலில்  ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே மெனிங் சந்தையின்  நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த எவராயினும் இது வரையில்  பீ.சீ.ஆர்  பரிசேதனைகளை மேற்கொண்டிருக்கவில்லையாயின் உடனடியாக அந்த பரிசோதனைகளை செய்துக் கொண்டு,தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

அதனை தொடர்ந்தே  சந்தை  நடவடிக்கைகளை  ஆரம்பிப்பதற்கான  அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் மத்திய கொழும்பிற்கு பொறுப்பான  சிரேஸ்ட பொலிஸ்  அத்தியட்சகர்  நிசங்க  சந்திரசேனவை  071-8591559 என்ற  தொலைபேசி  இலக்கத்துடன் தொடர்பு  கொண்டு  பீ.சீ.ஆர்  பரிசோதனைகளை மேற்கொள்வது தொடர்பிலான  உரிய  தகவல்களையும் அனுமதியையும்  பெற்றுக்கொள்ள முடியும்.