மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியானது 156 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் இறுதிப் போட்டியானது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் ஆரம்பமானது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

டெல்லி அணி சார்பில் ஆரம்ப வீரராக மார்கஸ் ஸ்டோய்னஸ் மற்றும் ஷிகர் தாவன் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.

மும்பை அணி சார்பில் ட்ரண்ட் போல்ட் முதல் ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள முதல் பந்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டொய்னஸ் டிகொக்கிடம் பிடிகொடுத்து, டக்கவுட்டுடன் வெளியேறினார்.

அவரின் ஆட்டமிழப்பினையடுத்து மும்பையின் பந்து வீச்சுகளில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் தகர்த்தெறியப்பட்டன. 

அதன்படி ரஹானே 2 ஓட்டங்களுடனும், தவான் 15 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் டெல்லி அணி 22 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது.

எனினும் நான்காவது விக்கெட்டுக்காக ஸ்ரேயஸ் அய்யரும், ரிஷாத் பந்தும் ஜோடி சேர்ந்து சரிவிலிருந்த அணியை மீட்கப் போராடினர்.

அவர்களில் போராட்டத்தின் பயனாக டெல்லி அணியானது 14 ஓவர்களின் நிறைவில் 108 ஓட்டங்களை குவித்தது.

இவர்களின் இணைப்பாட்டமானது மும்பை இந்தியன்ஸ் அணியை சற்று கதிகலங்க வைத்தபோதும், கூல்டர்-நைல் இந்த அவர்களின் இணைப்பாட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

அதன்படி ரிஷாத் பந்த் 15 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த சிம்ரன் ஹேட்மேயரும் 5 ஓட்டத்துடனும், அக்ஸர் படேல் 9 ஓட்டத்துடனும், ரபடா எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது.

ஆடுகளத்தில் ஸ்ரேயஸ் அய்யர் 50 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 65 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் மும்பை அணி சார்பில் ட்ரண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், கூல்டர்-நைல் 2 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.