பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக பாபர் அசாம் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக பாபர் அசாம் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 சர்வதேச போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியைத் தலைமை தாங்கி வழி நடத்தி வரும் நிலையிலேயே தற்போது டெஸ்ட் அணித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியைத் தலைமை தாங்கி வழி நடத்துவது அவரது பிரதான கடமையாக தற்போது உள்ளது.

இத் தொடரானது முறையே டிசம்பர் 26-30 மற்றும் 2021 ஜனவரி 3-7 ஆம் திகதிகளில் நியூஸிலாந்தின் Mount Maunganui மற்றும் Christchurch ஆகிய இடங்களில் நடைபெறும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி தலைவராக இருந்தார்.

இந் நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை அசார் அலியுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத் தலைவர் எஹ்சன் மணி இந்த நியமனத்தை உறுதிப்படுத்தினார்.

இதன்போது ஒரு தலைவராக அணியை வழிநடத்தியமைக்கு அசார் அலிக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.