ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவு ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவேண்டும் என்ற தேவை இல்லை. தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவை முறித்துக்கொள்வோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடகப்பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தில் எமது கூட்டணிக்குள்ளேயே நபர்கள் உள்ளனர். ரணிலும் விமலுமே கட்சியை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடனான இந்து ஆண்டுகால பயணத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மேற்கொள்வதற்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இணக்கப்பாடு இல்லையென பொது எதிரணியினர் தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு என்னவென வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்கின்றது என்றால் அது நாட்டின் பிரதான சிக்கல்களை நீக்கவும், சரவதேச அழுத்தங்களில் இருந்து விடுபடவுமேயாகும். அதைத்தவிர ஐக்கிய தேசியக் கட்சியுடன் கைகோர்த்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை. கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக எழுந்த சர்வதேச அழுத்தங்கள் மற்றும் பாரிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் எம்மால் தனித்து முகங்கொடுக்க முடியாது போனது. 

எனினும் பிரதான இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வதேச சவால்களுக்கு முகம்கொடுத்து இன்று நாட்டை விடுவித்துள்ளோம். ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிணைந்து சவால்களுக்கு முகங்கொடுத்து மீட்டுள்ளனர். அதேபோல் தேசிய பிரச்சினைக்கு முகங்கொடுக்க வேண்டிய தேவை உள்ளது. அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதிலும், நாட்டின் பொருளாதார நிலைமைகளை சரிசெய்வதிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயங்களில் நாம் ஒன்றிணைந்து செயற்பட்ட போதிலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான கொள்கையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தவும் கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி எமது கட்சியை பின்தள்ள வேண்டும் என்ற ஆசையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ளது. அவர்களுக்கான சந்தர்ப்பம் ஒன்று வரும் வரையில் காத்துக்கொண்டு உள்ளனர். அவ்வாறு இருக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளை நம்பி எம்மால்   செயற்பட முடியாது. நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலத்தினை அதிகரிக்க வேண்டும். பிரதேச சபை மட்டத்திலும், மாகாணசபை மட்டத்திலும் எமது கட்சியின் செயற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்.  

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தில் எமது கூட்டணிக்குள்ளேயே நபர்கள் உள்ளனர். விமல் வீரவன்ச போன்றவர்கள் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் உளவாளிகளாக செயற்படுகின்றனர். ரணில் விமல் கூட்டணியின் உறவை நாம் அறிவோம். பாராளுமன்றத்தில் விமர்சிக்கும் இவர்கள் தனிப்பட்ட ரீதியில் தொடர்புகளை வைத்துள்ளனர். கடவுசீட்டு பிரச்சினை எழுந்தபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட முயற்சியில் தான் விமல் வீரவன்ச தப்பினார். ஆகவே இன்று வெளிவேசம் போட்டுக்கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவிபடுத்தவே முயற்சிக்கின்றனர் என்றார்.