பதுளை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் 1,215 குடும்பங்களுக்கு ஒரு கோடியே இருபத்தொரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருப்பதாக, பதுளை மாவட்ட அரச அதிபர் தமயந்தி பரணகம தெரிவித்தார்.

பதுளை மாவட்டத்தில் கொரோனா தொற்று விடயமாக தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பத்தினருக்கு அரசினால் வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து, பதுளை அரச அதிபரிடம் வினவிய போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,

“பதுளை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை, வெலிமடை, லுணுகலை, பசறை, மகியங்கனை, ஹல்துமுல்லை, ஹாலிஎல, ஊவா – பரணகமை, மீகாகியுல, சொரணாதொட்டை ஆகிய பிரதேசங்களில் 1,215 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவுப் பொதிகள், அவ்வவ் பிரதேச செயலாளர்கள் ஊடாக, தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கப்பட்டுள்ளன. குடும்பமொன்றிற்கு பத்தாயிரம் ரூபாவிற்கு பெறுமதியான உலர் உணவுப் பொருட்களே, வழங்கப்பட்டுள்ள பொதியில் உள்ளன.

இவ்வகையில், இதுவரைக்கும் ஒரு கோடியே இருபத்தொரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கு, உணவுப் பொதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன” என்றும் குறிப்பிட்டார்.