(கா. சந்திரன்)நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் மேற்கொள்ளப்பட  உள்ள எதிர்ப்பு பேரணி வரலாறு படைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர்  உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்துக்கு எதிராக மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் கூட்டு எதிரணியினர்  கண்டியில் மேற்கொள்ள உள்ள பாத யாத்திரையில் பொது மக்களை ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கும் வகையில் இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக கூட்டு எதிர்க்கட்சியினர் துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில, லட்சக்கணக்கான பொது மக்கள் மீண்டும்  மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வர வேண்டும் என ஆவல் கொண்டிருக்கின்றார்கள். எனவே பொது மக்கள் எம்மோடு இந்த எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்து கொண்டு புது யுகத்துக்கான தேவையினையும் மைத்திரி ரணில் இணைந்த தேசிய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலை திட்டத்துக்கும் வழி வகுப்பார்கள்.எதிர்வரும் 27 ம் திகதி கண்டியில்  விசேட பூஜைகளுடன் எமது இந்த எதிர்ப்பு பேரணி ஆரம்பமாக உள்ளது. இதன்படி 28 ம் திகதி கண்டியிலும் , 29 ம் திகதி மாவனெல்லையிலும் ,30 ம் திகதி நெழுந்தேனியவிலும் ,31 ம் திகதி நிட்டம்புவவிலும் ,தொடர்ந்து முதலாம் திகதி கொழும்புக்கும் நாம் எமது எதிர்ப்பு பேரணியினை மேற்கொள்ள உள்ளோம்.  தேசிய அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அரசியல் பழிவாங்கல்கள் ,புதிய அரசியல் அமைப்பினால்  நாட்டுக்கு எதிராக இடம்பெற்றுள்ள சதி,  உள்ளளுராட்சி  மன்ற தேர்தலைகளை  திட்டமிட்ட  முறையில்  சரியான நேரத்தில் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றமை, இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தம், வற் வரி அதிகரிப்பு ,விவசாயிகளுக்கு மானிய உரங்களை வழங்காமல் ரத்து செய்து வருகின்றமை ஆகிய காரணங்களை  முன்வைத்தே இந்த எதிர்ப்பு பேரணி நடத்தப்பட உள்ளது என்றார்.இந்த துண்டு பிரசுரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில்  கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல ரோஹித அபேகுணவர்தன,குமார வெல்கம,பந்துல குணவர்தன ,உதய கம்பன்பில,டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து  கொண்டிருந்தனர்.