- கமலா ஹரிஸ் அடுத்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஒரு முன்னிலை வேட்பாளராக உருவாகலாம் - ஆய்வாளர் இம்ரான் புர்கான்
- உப ஜனாதிபதிக்கான கமலா ஹரிஸின் தெரிவு அற்புதமானது - அமெரிக்க பேராசிரியர் பில். சில்கொக்
- கமலா இந்தியாவில் தங்கியிருக்கும்போது அவருடைய தாத்தா தினமும் காலையில் நடைப் பயிற்சிக்கு செல்லும்போது கமலாவையும் அழைத்து செல்வாராம். அதுவே அவரை அமெரிக்காவில் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கான உந்து சக்தியை அளித்துள்ளது.
நடைபெற்று முடிந்த அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலில் பல்வேறு புதிய வரலாற்று அத்தியாயங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பல சாதனைகள் இந்த தேர்தல் ஊடாக நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. முக்கியமாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் அதிகளவு வீதமான மக்கள் தேர்தலில் வாக்களித்திருக்கின்றனர். தேர்தலில் ஒரு வேட்பாளர் பெறக்கூடிய அதிக நேரடி மக்கள் வாக்குகளை இம்முறை ஜோ பைடன் பெற்றுள்ளார்.
அதேபோன்று அமெரிக்க வரலாற்றையே மாற்றி எழுதியிருக்கின்றார் இந்தியாவின் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் வம்சாவளியான கமலா ஹாரிஸ்.
அமெரிக்காவின் முதலாவது உப பெண் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கமலாதேவி ஹாரிஸ் அமெரிக்காவின் வரலாற்றை மீள புதுப்பித்துள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரை காலமும் அமெரிக்காவில் ஒரு பெண் ஜனாதிபதியோ அல்லது உப பெண் ஜனாதிபதியோ தெரிவு செய்யப்படவில்லை.
அந்தவகையில் முதலாவது உப பெண் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளமையானது அமெரிக்காவை பொறுத்தவரையில் ஒரு புதிய வரலாற்றை ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கமலாதேவி ஹாரிஸ் அந்த சாதனையை மட்டும் நிகழ்த்தவில்லை.
தமிழர் பூர்வீகத்தை கொண்ட கமலா ஹாரிஸ் முதற்தடவையாக அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் இருந்து குடிபெயர்ந்த ஒருவரின் மகள் இவ்வாறு உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை அவர் செய்துள்ளார்.
இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கொண்ட அமெரிக்காவில் பல சிரேஷ்ட தலைவர்கள் உருவாகியிருக்கின்றனர். ஆனால் இதுவரை அந்த நாட்டில் ஒரு பெண் ஜனாதிபதியையோ பெண் உப ஜனாதிபதியையோ செய்து கொள்ள முடியவில்லை.
இதற்கு முன்னர் ஹிலாரி கிளின்டன் 2016 ஆம் ஆண்டு பெண் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. 2008 ஆம் ஆண்டு குடியரசு கட்சியின் சார்பில் சாரா பாலின் என்ற பெண் உப ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டார் அவராலும் இலக்கை அடைய முடியவில்லை.
அதேபோன்று 1984 ஆம் ஆண்டு ஜனநாயக கட்சியின் சார்பில் ஜெரால்டின் பெரோரொ என்ற பெண் உப ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு இருந்தார். அவரினாலும் வெற்றி பெற முடியவில்லை.
ஆனால் அந்த அனைத்து வரலாற்று கட்டங்களையும் தாண்டி இந்த சாதனையை கமலா ஹாரிஸ் படைப்பதற்கு தற்போதைய அரசியல் களம் சந்தர்ப்பம் அமைத்து கொடுத்தது.
இரண்டு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவில் பல்வேறு வலிமிகுந்த வரலாற்று அத்தியாயங்களும் உள்ளன. அவற்றில் ஒன்றாக ஆபிரிக்கக் குடியேற்ற அடிமை விடயங்களைக் குறிப்பிடலாம்.
எனினும் அவ்வாறான கசப்பான அனுபவங்களைத் தாண்டி இன்று அமெரிக்கா ஜனநாயக ரீதியில் பல்வேறு அத்தியாயங்களை உருவாக்கி வருவதுடன் அதனை புதுப்பித்தும் வருகின்றது.
அதாவது அமெரிக்காவில் பல்லின மக்கள் குடி பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தது. எனினும் குடிபெயர்ந்து வந்த ஒருவர் மற்றும் மற்றுமொரு உலகின் பாகத்தில் உள்ள ஒரு இனத்தை சேர்ந்த ஒருவர் அந்த நாட்டில் உப ஜனாதிபதியாக தெரிவாகுவது என்றால் அந்த நாட்டு மக்களின் ஜனநாயகத்தின் மீதான ஒரு பரந்துபட்ட ரீதியான பற்றை இது எடுத்துக்காட்டுகிறது.
அமெரிக்கா தொடர்பான உலக அணுகுமுறைகளில் சர்வதேச நகர்வுகளில ஏனைய நாடுகளில் பல்வேறு விமர்சனங்கள் காணப்பட்டாலும் கூட உள்ளக ரீதியில் அந்த நாட்டின் ஜனநாயகம் மீதான பற்று மற்றும் அது மீதான அவர்களின் உணர்வு பரந்துபட்ட மட்டத்திலேயே உள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இல்லாவிடின் கமலா ஹாரிஸ் போன்றதொரு பெண் அந்த நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு செல்வதென்பது வேறு நாடுகளில் சாத்தியமற்றதாகவே காணப்படுகிறது.
அதுமட்டுமன்றி கமலா ஹாரிஸ் என்பவரின் தலைமைத்துவ கதாபாத்திரம், அவருடைய தலைமைத்துவ பண்பு, சிவில் செயற்பாடுகளிலான ஈடுபாடு, தன்னம்பிக்கை, சவால்களை நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான திறமை என்பனவும் அவரை இந்த வெற்றிக்கு அழைத்துச் சென்றது என்றே கூறவேண்டும்.
யார் இந்த கமலா ஹாரிஸ்
கமலா ஹாரிஸ் இந்தியாவின் தமிழகத்தின் ஒரு தமிழ் குடும்பம் ஒன்றின் பூர்வீகத்தை சேர்ந்தவர். 1958 ஆம் ஆண்டு சியாமளா கோபாலன் என்ற தமிழ் பெண் தமிழகத்திலிருந்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்பதற்காக செல்கின்றார். 19 வயதில் கலிபோனியா செல்லும் சியாமலா கோபாலன் அங்கு புற்றுநோய் தொடர்பான ஒரு டாக்டராக உருவாகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பேராசிரியராக இருந்த ஐமைக்காவை சேர்ந்த ஹரீஸ என்பவரை திருமணம் செய்யும் சியாமளா கோபாலன் கமலாதேவி மற்றும் மாயா ஆகிய இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆகிறார்.
தாய்,சகோதாரி,தாயின் தந்தை உள்ளிட்டவர்குளடன் கமலா
எனினும் ஆறு வருடங்களில் சியாமளா கோபாலன் மற்றும் ஹரிஸ் ஆகியோரின் திருமண வாழ்க்கை முறிகிறது. ஆனால் விவாகரத்தின் பின்னரும் சியாமளா கோபாலன் தனது இரண்டு குழந்தைகளையும் தனித்தே வளர்க்கிறார்.
முக்கியமாக அவர் தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கையை அதிக அளவில் ஊட்டியே வளர்த்திருக்கிறார். அதாவது தாம் கருப்பினத்தவர்கள் ஏனைய சமூகத்திலிருந்து எவ்வாறான அநீதிகள் தமக்கு இடம்பெறும் என்பது தொடர்பான விடயங்களை அவர் சிறந்த முறையில் தனது பிள்ளைகளுக்கு கற்பித்திருந்ததுடன் அவர்கள் எவ்வாறு தன்னம்பிக்கையுடன் நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொள்ள வேண்டும் என்ற ஒரு சிறந்ததொரு பாடத்தையும் கற்றுக் கொடுத்திருந்தார். 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கமலா தாயின் இந்த தன்னம்பிக்கை தொடர்பான ஒரு புரிதலுடன் தனது வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்தார்.
சிறுவயது முதலே மிகவும் தன்னம்பிக்கைமிக்கராகவே கமலா காணப்பட்டார். அதுமட்டுமன்றி நெருக்கடிகள் சவால்களை எதிர்கொள்ளும் போது அவர் ஒருபோதும் தளர்ந்து விடவில்லை. ஒரு தைரியமான தலைமைத்துவ பண்பு மிக்க ஒரு பெண்ணாகவே கமலா ஹாரிஸ் வலம்வந்தார்.
ஹாவர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டம் முடித்த கமலா ஹாரிஸ் பின்னர் கலிபோர்னியாவில் சட்டம் பயின்று சட்டத்தரணி ஆகினார். தொடர்ந்து 2003 ஆம் ஆண்டில் சான்பிரான்சிஸ்கோவில் சட்டத் துறையில் பணியைத் தொடர்ந்த கமலா கமலா ஹரிஸ் 2011ஆம் ஆண்டு கலிபோர்னியா மாநிலத்தின் சட்டமா அதிபராக பதவியேற்றார். 2017 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அவர் கலிபோனியா மாநிலத்தில் செனட்டராக தெரிவுசெய்யப்பட்டு செனட் சபை உறுப்பினரானார்.
அவர் தனது வாழ்க்கையில் பல்வேறு தடவைகள் இந்தியாவின் தமிழகத்துக்கு வருகை தந்திருக்கிறார். கமலாவின் தாய் சியாமளா கோபாலன் இந்தியா வரும் போதெல்லாம் அவர் கமலா ஹாரிஸ் மற்றும் மாயாவை ஆகியோரை அழைத்து வந்திருக்கிறார். அந்த வகையிலேயே அவருக்கு தமிழகத்துடனான தொடர்பு இருந்துள்ளது. கமலாவின் தாயின் தந்தை சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்தவர். கமலா இந்தியாவில் தங்கியிருக்கும்போது அவருடைய தாத்தா தினமும் காலையில் நடைப் பயிற்சிக்கு செல்லும்போது கமலாவையும் அழைத்து செல்வாராம். அந்த விடயங்களே அவரை அமெரிக்காவில் மக்களின் உரிமைகளுக்காக போராடுவதற்கான உந்து சக்தியை அளித்ததாக தெரிவித்திருக்கிறார். திருவாரூரில் உள்ள துளசேந்திரபுரம் என்ற பகுதியில் கமலா ஹரிஸின் உறவினர்கள் இன்னும் வசிக்கின்றனர்.
அவர் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவின் செல்வாக்கு மிகுந்த பெண்களில் ஒருவராகவே கருதப்பட்டுவந்தார். செனட்டராக பதவி வகித்த கமலா ஹாரிஸ் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டின் மக்களின் கவனத்தை ஈர்த்த விடயங்களில் ஈடுபட்டார். 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு முதலில் தனது பெயரை அவர் பதிவு செய்திருந்தார்.
எனினும் சில காரணங்கள் காரணமாக ஒரு கட்டத்தில் அவர் அந்த முயற்சியில் இருந்து விலகினார். ஆனால பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட ஜோ பைடன் கமலாவின் திறமை அவருடைய பன்முக தன்மை மற்றும் சிறந்த தலைமைத்துவ ஆற்றல் என்பவற்றை கருத்திற் கொண்டு தனது உப ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தார்.
அதன்படி இன்று அவர் அமெரிக்காவின் வரலாற்றை மாற்றி எழுதியிருப்பதுடன் முழு உலகத்துக்கும் பெருமை சேர்ப்பவராகவும் முக்கியமாக தெற்காசிய பிராந்தியத்தில் தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பவராகவும் உருவெடுத்திருக்கிறார்.
கமலா ஹாரிஸ் தொடர்பாக அமெரிக்கா அரிசோனா பல்கலைகழகத்தின் பேராசிரியர் பில் சில்க்கொக் இவ்வாறு பதிவிடுகிறார். ' கமலா ஹாரிஸ் என்பவர் ஒரு அற்புதமான தெரிவாகவே இருக்கின்றார். அவர் ஒரு சிறந்த தலைமைத்துவ பண்பை கொண்டுள்ளதுடன் முக்கியமாக பெண்களுக்கான ஒரு தலைமைத்துவ முன்மாதிரியாக செயல்படும் ஆற்றலை கொண்டிருக்கின்றார். உப ஜனாதிபதிக்கான அவருடைய தெரிவு ஒரு அற்புதமான தெரிவாகும்' இவ்வாறு அவர் பதிவிடுகிறார்.
அந்த அளவுக்கு கமலா ஹரிஸின் தலைமைத்துவ பண்புகள் அவருடைய மக்களுடனான ஈடுபாடு தொடர்பாக அமெரிக்க மக்கள் மத்தியில் ஒரு சிறந்ததொரு தெளிவும் ஒரு புரிதலும் காணப்படுகிறது.
உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் ஒரு வரலாற்றின் ஆரம்பமாக இது இருக்கின்றது என்று குறிப்பிட்டார். அத்துடன் அமெரிக்காவின் முதலாவது பெண் உப ஜனாதிபதியாக நான் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றேன் ஆனால் நான் இறுதிப் பெண் உப ஜனாதிபதி அல்ல. இது முடிவல்ல, ஒரு ஆரம்பம், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு போராட வேண்டியிருக்கின்றது, தியாகம் செய்ய வேண்டி இருக்கின்றது, ஆனால் அது மகிழ்ச்சிக்குரியது, இது அமெரிக்காவுக்கு ஒரு புதிய நாள்' அமெரிக்க மக்களுக்காக நான் நேர்மையாக பணியாற்றுவேன் பைடன் - ஒபாமா போன்ற பலம் வாய்ந்த கூட்டணி போல் எமது கூட்டணி அமையும்' இவ்வாறு கமல் ஹரிஸ் தெரிவித்திருந்தார்.
கமலா ஹரிஷின் கணவர் டக்ளஸ். அவர் தனது பயணத்தில் ஒரு சிறந்த ஊன்றுகோலாக இருந்தவர் என கமலா ஹாரிஸ் குறிப்பிடுகிறார். தனது தாய் சியாமளா கோபாலன் மற்றும் தனது சகோதரி மாயா தனது இரண்டு பிள்ளைகள் ஆகியோர் தனது பயணத்தில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்நிலையில் கமலா ஹரிஸுக்கு 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதலாவது பெண் ஜனாதிபதியாக உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் அமெரிக்க அரசியல் ஆய்வாளர் இம்ரான் புர்கான் இவ்வாறு குறிப்பிடுகிறார்.. 'தெற்காசிய பாரம்பரியத்தை கொண்ட மக்களுக்கு கமலா ஹரிஷின் உப ஜனாதிபதி தெரிவு என்பது மிகவும் முக்கியமான ஒரு தருணத்தை காட்டுகிறது. இது நாம் பின்பற்றக்கூடிய ஒரு கதாநாயகியை தருகிறது. எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு 82 வயதை அடையும் ஜோ பைடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் இருக்கலாம். அப்படியானால் கமலா ஹரிஸ் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் ஒரு முன்னிலை வேட்பாளராக இருப்பார். அடுத்த நான்கு வருடங்களில் அவரது செயற்பாடுகள் நமது சமூகங்களுக்கு பெருமை சேர்க்கும். அமெரிக்க ஊடகங்கள் தற்போது அவரது பின்னணி மற்றும் தெற்காசிய கலாச்சாரத்தில் அதிக கவனம் செலுத்தும் " இவ்வாறு இம்ரான் புர்கான் கூறுகிறார்.
அந்த வகையில் கமலா ஹரிஸ் தெற்காசிய பிராந்தியத்தில் தமிழ்மொழிக்கு உலக அளவில் வரலாற்று ரீதியான ஒ பெருமையை சேர்த்திருக்கிறார்.
இந்நிலையில் அடுத்த நான்கு வருடங்கள் அவருக்கு ஒரு சவால் மிக்கதாக அமையும் என்பது தெளிவானது. இந்தளவு தூரம் சவால்களை கடந்துவந்த அவர் தற்போதைய சவால்களையும் நிச்சயம் முறியடித்து வெற்றிநடை போடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
ரொபட் அன்டனி
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM