கட்சி பேதங்களுக்கு அப்பால் மலையக மக்களுக்கான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சேவைகள் தொடரும் என்று காங்கிரஸின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோத்தாபய ராஜபக்ஷவின் "சௌபாக்கிய நோக்கு" எனும் எண்ணக்கருவுக்கமைய புறநெகும திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா பிரதேச சபை பல்நோக்கு கட்டத்தின் திறப்பு விழா இன்று (09.11.2020) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மருதபாண்டி ராமேஷ்வரன் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

" நுவரெலியாவிலும் ஏனைய சில இடங்களிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆளுகையின் கீழ் உள்ளாட்சி மன்றங்கள் இருக்கின்றன.

எனினும், கட்சி பேதம் பார்த்து எமது கட்சி சேவை வழங்குவதில்லை. அனைத்து மக்களுக்கும் காங்கிரஸின் சேவைகள் தொடரும்.

கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக மக்களுக்கு சேவை வழங்குமாறு காங்கிரஸின் உள்ளாட்சிமன்ற தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மறைந்த எமது தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போதைய எமது தலைவர் ஜீவன் தொண்டமானிடமும் அதே எண்ணம் தான் காணப்படுகின்றது.

அதேவேளை, 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்ககூடியதாக இருக்கும். கட்சி வேறுபாடின்றி மக்களுக்கான காங்கிரஸின் சேவைகள் எதிர்காலத்திலும் தொடரும்.

 அத்துடன், மற்றுமொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும். தீபாவளி பண்டிகை எமக்கு முக்கியம்தான், அதனைவிடவும் சமூக பாதுகாப்பு முக்கியம். எனவே, சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்." - என்றார்.