(செ.தேன்மொழி)

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விட  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ செயற்திறன் அற்ற தலைவர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷான் விதானகே தெரிவித்தார்.

 மேலும், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆளும் தரப்பினர் தனித்து செயற்படுவதை நிறுத்தி விட்டு , எதிர்தரப்பினரையும் இணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும் என்றும், இதன் ஊடாகவே வைரஸ் பரவலை வெற்றி கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.அவர் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ ஆட்சிக்கு வந்து ஒரு வருடகாலம் பூர்த்தியாகும் நிலையில், அதிகளவிலான வர்த்தமானி அறிவித்தல்களை மாத்திரமே வெளியிட்டுள்ளார். 

மாறாக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை.கொரோனா வைரஸ் பரவலின் முதலாம் அலை ஏற்பட்டிருந்த போது அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்த முயற்சிகள் தற்போது செயலிழந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

 சுகாதார தரப்பினர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

எனினும், சுகாதார அமைச்சர் உட்பட ஆளும் தரப்பை சேர்ந்தோர் ஒவ்வொரு நாளும் தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக வெறுமனே ஊடக சந்திப்புக்களை மாத்திரமே நடத்தி வருகின்றனர். மாறாக மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை என்றார்.

பீ.சி.ஆர் பரிசோதனைக்கருவிக்கு நிகரான அன்ரினைட்டர் கருவிகள் கொள்வனவு தொடர்பில் ஆளும் தரப்புக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இதன் காரணமாக ஆளும் தரப்பினுள் ஒரு குழு மோசடி செய்யும்போது மற்றுமொரு குழு காட்டிக்கொடுப்பதாகவே எமக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

 இந்த நெருக்கடி நிலமையிலும் மோசடிகள் இடம் பெறுவதனை  ஜனாதிபதி  கருத்தில் கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பில் தனித்து செயற்படுவதை நிறுத்தி விட்டு ஆளும் தரப்பினர், எதிர்தரப்பினரையும் இணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். அதனாலேயே வைரஸ் பரவலை வெற்றி கொள்ள முடியும் என்றார்.

மேலும், வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளை சிகிச்சைக்காக அழைத்து செல்லும் போது இராணுவத்தினரும் பொலிஸாருமே முன்னின்று செயற்பட்டு வருகின்றனர். இதனால் நோயாளிகள் தங்களை கைது செய்வதாக கருதியே செயற்படுகின்றனர். அதனாலேயே அவர்கள் தலைமறைவாகின்றனர். இதன் காரணமாக சிலர் தங்களது வீடுகளில் இருக்கும் போதே உயிரிழந்துள்ளனர் என்றார்.