கால்பந்து விழிப்புணர்வு விளையாட்டு போட்டியில் பாபா ராம்தேவ் கலந்து கொண்டு விளையாடினார். 

டெல்லி ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில்,  கண்காட்சி கால்பந்துப் போட்டி நேற்றிரவு நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் 'தூய்மை இந்தியா 'திட்டத்துக்கும், பெண் குழந்தைகள் நலனுக்கான 'பேட்டி பட்சாவோ' திட்டத்துக்கும் நிதி திரட்டும் வகையில்,  இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியுடன் பாலிவுட் நடிகர்கள் அணி மோதியது. 

இந்தியாவுக்கான கால்பந்து விளையாட்டுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் போட்டியைத் ஆரம்பித்து வைத்தார்.

பாபா ராம்தேவ் , வழக்கமான காவி உடையுடன் காலில் சப்பாத்துகளும் அணிந்திருந்தார். அத்துடன் களத்தில் இறங்கியும் விளையாடியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில், இந்திய அணியின் முன்னாள் தலைவரும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியுமான பிரசுன் பேனர்ஜி, கனரகத் தொழில் துறை அமைச்சர் பாபுல் சுப்ரியா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். 

பாலிவுட் நட்சத்திரங்கள் அணியில் அபிஷேக் பச்சன், ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த கண்காட்சி போட்டியில் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த நிதி, பிரதமரின் 'தூய்மை இந்தியா' மற்றும்  'பேட்டி பச்சாவோ' திட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.