•  கமலா ஹரிஸ் மிகச்சிறந்த ஒரு முன்மாதிரி தலைவர்  
  • ஜோ பைடன்   உலக சுகாதார ஸ்தாபனத்துடன்  அமெரிக்காவை இணைப்பார்  
  •  டொனால்ட் ட்ரம்ப் ஒரு அரசியல்வாதி. ஜோ பைடன் ஒரு தலைவர். ( Statesman)
  • 120  வருடங்களுக்கு பின்னர் இம்முறை அமெரிக்கர்கள் அதிகளவில் வாக்கு பதிவு 
  • மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். 
  • ட்ரம்பின் அறிவிப்பு  அதிர்ச்சியாக இருந்தது.
  • அமெரிக்க மாநிலங்களின் இராஜாங்க செயலகங்களே  தேர்தலை நடத்துகின்றன.
  • இம்முறை தபால் மூலம் அதிகளவு வாக்களிப்பு இடம்பெற்றதால்   எண்ணுவதில் காலதாமதம்   ஏற்பட்டது.  

 

நேர்காணல் - ரொபட் அன்டனி  

அமெரிக்க தேர்தலில் எங்கும் ஊழல் நடைபெறவில்லை. இங்கு தேர்தலில் மிகவும் நவீனகரமான கணினிமயப்பட்ட முறைமை பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு ஊழல்கள் நடைபெற்றதற்கான ஆதாரமும் இல்லை என்று அரிசோனா பல்கலைக்கழகத்தின்  வோல்ட்டர் குரோன்கிட் ஊடகவியல் மற்றும் மக்கள் தொடர்பு பீடத்தின் இணை பேராசிரியர் பில் சில்கொக்  தெரிவித்தார்.

அமெரிக்க தேர்தலில் ஏற்பட்ட தாமதம் ஜோ பைடனின் வெற்றி  மற்றும்  வாக்களிப்பு வீதம் அதிகரித்தமை  தபால் மூலம் அதிக வாக்களிப்பு பதிவாகியமை ஜோ பைடன் அதிக தேர்தல் கல்லூரிகளை பெற்றமை உள்ளிட்ட பல்‍வேறு விடயங்கள் குறித்து கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

செவ்வியின் விபரம் வருமாறு,

கேள்வி : அமெரிக்க தேர்தலில் தற்போது என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது?

பதில் : அமெரிக்க தேர்தலில்  பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகமானது 200 வருடங்களையும் தாண்டியது. இதில் சில வளர்ச்சிகளும் வலிகளும் இருக்கின்றன. சில வலிகள் வலி மிகுந்தவை.  

 தற்போது  தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பல மாநிலங்களில்  பைடன் வெற்றிபெற்றுள்ளார்.  அரிசோனா மாநிலம் (விஷேடமாக அது நான் வாழும் மாநிலம்)  மரபு ரீதியான குடியரசு கட்சிக்கு ஆதரவாளர்கள் அதிகம் இருக்கும்  மாநிலமாகும்‌. 

ஆனால் இம்முறை இங்கு மாற்றம் இடம்பெற்றது.  குடியரசுக் கட்சியின் முன்னைய ஜனாதிபதி வேட்பாளர்  ஜோன் மெக்கெய்ன் இந்த மாநிலத்தில் இருந்து செனட்டராக தெரிவு செய்யப்பட்டவர்.   ஆனால் இம்முறை ஜோன் மெக்கேயின் மனைவி ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறார்.  

சிகப்பு குடியரசுக் கட்சியில் இருந்து நீல நிற ஜனநாயக கட்சிக்கு அவரின் மாற்றம் ஏற்பட்டது என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.  முக்கியமாக கொவிட் வைரஸ் பரவலை தடுப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இந்த மக்களுக்கு இருக்கின்றது.

எனவே மரபுரீதியான குடியரசு கட்சி ஆதரவாளர்கள் கூட இம்முறை ஜோ பைடனுக்காக துண்டு பிரசுரங்களை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்ததை கண்டோம். அதனால் அரிசோனாவில் நிலைமை மாறலாம். நான் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவன் ஆனால் நான் ஜோ பைடனுக்கு வாக்களிப்பேன் என்று அந்த ஆதரவாளர்கள் பிரசாரம் செய்தார்கள்.

அதனால் பல்வேறு விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல பாடங்களை இந்த தேர்தல் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு அமைதியான முறையிலான அதிகார மாற்றம் நடைபெறும் என்று நம்புகிறோம். அமெரிக்காவை முழு உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் அறிவோம்.

கேள்வி : உங்களது ஜனாதிபதி தேர்தல் முறைமையானது ஒரு குழப்பகரமானதா?

பதில் : அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முறையானது குழப்பகரமான அல்ல. உலகிலேயே மிகவும் சிறந்ததொரு தேர்தல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறை காணப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாநிலங்களிலும் வாக்குகளை அளிப்பது தொடர்பான வாக்களிப்பு தொடர்பான வித்தியாசமான சட்டங்கள் முறைமைகள் காணப்படுகின்றன.

அமெரிக்காவின் அரசியலமைப்பானது விரிவுபட்டதாகவும் இது தொடர்பான உரிமையை மாநிலங்களுக்கு அளிப்பதாகவும் அமைந்திருக்கின்றது. உதாரணமாக அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களையும் நீங்கள் 50 நாடுகள் போன்றே பார்க்க வேண்டும்.

உதாரணமாக தேர்தல் தினத்தன்று நீங்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்கலாம். அதேபோன்று தபால் ஊடாக  நீங்கள்  வாக்களிக்கலாம்.  உதாரணமாக மூன்று கிழமைகளுக்கு முன்னரே எனது  வாக்களிப்பு அட்டை வந்து விட்டது. நான் விரும்பினால்  தபால் ஊடாக எனது வாக்கை பதிவு செய்து அனுப்ப முடியும். 

அல்லது  வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று எனது வாக்கை அளிக்கலாம். இது சில மாநிலங்களில் வித்தியாசமானதாக இருக்கும். முன்கூட்டிய வாக்களிப்பு என்று இதனைக் கூறுவார்கள். வாக்களிப்பு தினம்வரை நீங்கள் பொறுத்திருக்க வேண்டிய அவசியமில்லை.‌ சில வாரங்களுக்கு முன்னரே உங்கள் வாக்குகளை தபாலில் அனுப்ப முடியும்.

கேள்வி : ஏன் முடிவுகள் சில மாநிலங்களில் தாமதமடைந்தன?  

பதில் : கடந்த 5  தினங்களாக எந்தவிதமான குழப்பமும் இல்லை. எவ்விதமான ஊழல் செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. அதிகமான வாக்குகள் இம்முறை தபால் மூலம் அதிகளவு அனுப்பப்பட்டுள்ளதால் அவற்றை எண்ணுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதுவே தற்போதைய நிலையாகும். அதற்கும் ஒரு காரணம் இருக்கின்றது. அதாவது பென்சில்வேனியா மாநிலத்தில் வாக்கு எண்ணும் தாமதம் குறித்து உலகளவில் கவனம் செலுத்தப்பட்டது. 

அதற்கு காரணம் பென்சில்வேனியாவில் இதற்கு முன்னர் எக்காலத்திலும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவில்லை. அங்கு இது முதற்தடவை என்பதால் எண்ணுவதில்  பாரிய தாமதம்  ஏற்பட்டது. ஆனால் எனது மாநிலமான அரிசோனாவில் நாங்கள் பல  வருடங்களாக இந்த தபால் மூல வாக்களிப்பு அனுபவிக்கிறோம்.   

எமது தேர்தல் முறைமையில் எவ்விதமான குழப்பமும் சிக்கலும் இல்லை.   ஆனால் சில மாநிலங்களில் இரண்டு வேட்பாளர்களும் இடையிலான வாக்கு வித்தியாசம் ஒரு வீதம் என்றால் பெரும்பாலும் மீள் எண்ணிக்கைக்கு செல்லலாம்.  

கேள்வி : அமெரிக்காவுக்கு தேர்தல் ஆணையம்  என மத்திய அரசாங்கத்தில் எதுவும் இல்லை. இந்நிலையில் எவ்வாறு மாநில அரசாங்கங்கள் இந்த தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகளை  முன்னெடுக்கப்படுகின்றன?

பதில் : அமெரிக்காவுக்கு மத்திய அரசாங்கத்தில் தேர்தல் ஆணையகம் என்று ஒன்று இல்லை. ஆனால் மத்திய அரசாங்கத்துக்கு இராஜாங்கச் செயலகம் என்று ஒன்று இருப்பது போன்று மாநில அரசுகளுக்கும் இராஜாங்கச் செயலகங்கள்  உள்ளது. அவை வெளியுறவு சம்பந்தப்பட்டவை அல்ல.  அந்த மாநிலங்களின் ராஜாங்க செயலகமானது வெளியுறவுக் கொள்கையை பார்ப்பதில்லை. மாறாக தேர்தல் விடயங்களை கையாளும் செயலகமே அதுவாகும்.  உதாரணமாக அரிசோனாவுக்கு ஒரு பெண் இராஜாங்க  செயலராக இருக்கின்றார். அந்த ராஜாங்க செயலர் அரிசோனா மாநிலத்தில்  நீதியான நியாயமான தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்வார்.  

கேள்வி : அனைத்து மாநிலங்களும் தனிப்பட்ட ரீதியில் இந்த வாக்கெடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனவா?

பதில்  : சில மாநிலங்கள் பெரியதாகவும் சில மாநிலங்கள் சிறியதாகும் இருக்கின்றன.    சனத் தொகை வேறுபடும். இந்த நிலையில் அவர்கள் தமக்கு ஏற்ற வகையில் இந்த வாக்களிப்பு முறைமையை செய்கின்றார்கள்.

கேள்வி :  ஒவ்வொரு மாநிலங்களிலும் வாக்களிப்பு முறை வித்தியாசமானதா?

பதில் : ஒவ்வொரு மாநிலங்களிலும் வாக்குகளைச் சேகரிக்கும் முறை வித்தியாசமானது என்று கூறமுடியும். வாக்களிப்பு சீட்டுக்கள் ஒரே மாதிரியாகவே இருக்கும். அனைத்து மாநிலங்களிலும் வாக்களிப்பு அட்டையில் வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும். மக்கள் தமக்கு பிடித்தமான வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும்.

கேள்வி : ஜனாதிபதி  எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார் என்பதை குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?

பதில் : அமெரிக்காவில் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு தேர்தல் கல்லூரி முறைமை பயன்படுத்தப்படுகிறது. நேரடியான மக்கள் வாக்குகளினால் ஜனாதிபதி  தெரிவு செய்யப்படுவதில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு ஹிலாரி கிளின்டன் நேரடியான மக்கள் வாக்குகளில் கூடிய வாக்குகளைப் பெற்றிருந்தாலும் அவர் வெற்றிபெறவில்லை. அது ஒரு சிக்கலான முறைமையாக தெரியலாம். அதற்கு ஒரு வரலாற்று மரபு காணப்படுகிறது.

முன்னைய காலத்தில் அடிமைகளாக கருதப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. பின்னர் அதில் விட்டுக்கொடுப்பு செய்யப்பட்டது. அரசிலமைப்பு திருத்தப்பட்டது. எனவே  ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இவ்வாறு தேர்தல் கல்லூரிகள் வரையறுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் அடிப்படையில் இந்த மாநிலங்களுக்கு கல்லூரிகள்  வழங்கப்பட்டுள்ளன.  

அதிகமான தேர்தல் கல்லூரிகளை அதாவது 270 கல்லூரிகளை  பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். சிலர் இந்த தேர்தல் கல்லூரி முறைமை அநியாயமானது என்று கருதுகின்றனர். காரணம் அதிக தேர்தல் கல்லூரிகளை பெறுபவர் மக்களின் நேரடி வாக்குகளை  குறைவாக பெறக்கூடும் என்ற நிலைமை காணப்படுகிறது.  

ஆனால் இது ஒரு வரலாற்று ரீதியான சட்டமாக நீடிக்கிறது. அமெரிக்காவை உருவாக்கிய தலைவர்கள் இந்த தேர்தலில் இந்த முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

கேள்வி : தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி ஏன் டிரம்ப் நீதிமன்றத்தை நாடி இருக்கிறாரே?

பதில் : அமெரிக்க தேர்தலில் எங்கும் ஊழல் நடைபெறவில்லை. இங்கு மிகவும் நவீனகரமான கணினிமயப்பட்ட முறைமை பயன்படுத்தப்படுகிறது. ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை. அவ்வாறு ஊழல்கள் நடைபெற்றதற்கான ஆதாரமும் இல்லை. ஆனால் குடியரசு கட்சியின் வேட்பாளரினால் தனது ஆதரவாளர்களுக்கு இவ்வாறு ஊழல் இடம்பெற்றதாக ஒரு மனநிலையை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது.  

வாக்களிக்கும் முறை வாக்கு எண்ணும்முறை  என மிகவும் நவீனமான முறையில் கணினிமயப்படுத்தப்பட்டு நிலையில் சுயாதீனமாக தேர்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. எனவே இங்கு ஊழல்கள் மோசடிகள் இடம்பெற்றதாக கூறவே முடியாது. வாக்குகள் எண்ணும் போது கூட முறையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  

ஜனாதிபதி  ட்ரம்ப்  செய்தியாளர் மாநாட்டை நடத்தி ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறும்போது அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உலகத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அதிகாரத்துக்கு வரத் துடிக்கும் ஒருவரை போன்று அவரின் கூற்று அமைந்திருந்தது.

கேள்வி : 120 வருடங்களின் பின்னர் இம்முறை அதிகளவான வாக்களிப்பு வீதம் இருப்பதாக கூறப்படுகிறது.  வைரஸ் பரவலுக்கு மத்தியில் எவ்வாறு சாத்தியமானது?

பதில்  : 120  வருடங்களுக்கு பின்னர் இம்முறை மிக அதிகளவான வாக்களிப்பு அமெரிக்காவில் இடம்பெற்றிருக்கின்றது. காரணம் அதிகமான மக்கள் வாக்களிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.  வாக்களிப்பு தினத்தன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று அடையாளங் காணப்பட்டனர். எனினும் கூட மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டினர்.

காரணம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மக்கள் மிகவும் உறுதியாக இருந்திருக்கின்றனர். மக்கள் வித்தியாசத்தை எதிர்பார்க்கின்றனர்.

கேள்வி  : ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெறுவாரானால் இவ்வாறான மாற்றங்களை உலகம் அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்கலாம்?

பதில்  :  பைடன்  மீண்டும் கௌரவத்தை பெற்றுக் கொடுப்பார் என்று நம்புகிறோம். டொனால்ட் ட்ரம்ப் ஒரு அரசியல்வாதி. ஆனால் ஜோ பைடன் ஒரு தலைவர். ( Statesman) ட்ரம்ப் ஒரு பிரபல மிக்க மனிதராகவே கருதப்படுகிறார். ஆனால் பைடன் ஒரு அரசாங்கமாக பிரதிபலிப்பார். பைடன் சிறந்த ஒரு அனுபவம் வாய்ந்த தலைவராக இருக்கின்றார். நிறவெறி பிரச்சனை காலநிலை மாற்றம் பாலின சமத்துவம் போன்றவற்றில் அவர் முன்னேற்றத்தைக் கொண்டு வருவார். அமெரிக்க ஜனாதிபதியின் கௌரவத்தை  அவர் கொண்டு வருவார். எமது கூட்டு பங்காளர்களுடனான உறவில் கடந்த காலங்களில் சேதம் ஏற்பட்டது.  அவற்றை அவர்கள் சரி படுத்துவார் என்று நம்புகிறோம்.  முக்கியமாக ஜோ பைடன் மீண்டும்  உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து செயற்படுவார்.

கேள்வி  :  ஜனநாயக கட்சியின் உப ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பற்றிய உங்கள் அபிப்பிராயம்?

பதில் :  அது மிகவும் ஒரு போற்றத்தக்க தெரிவாகும். மிகச்சிறந்த ஒரு முன் மாதிரி பெண் தலைமைத்துவமாக கமலா ஹாரிஸ் திகழ்கிறார். அவர் நீங்கள் வாழும் உலகின் பகுதியிலிருந்து வந்தவர். அவர் பெண்களுக்கான ஒரு முன்மாதிரியாகவும் ஒரு எடுத்துக்காட்டு தலைமைத்துவமாகவும் திகழ்வார் என்பது எமது நம்பிக்கை. இளம் பெண்கள் மற்றும் அமெரிக்க ஆபிரிக்க பெண்கள் உள்ளிட்ட சகலருக்கும் ஒரு முன்மாதிரியாக அவர் இருப்பார்.

 ஜோ பைடன்  மாற்றங்களை ஏற்படுத்துவார். நாங்கள் ஒருவரை ஒருவர் செவிமடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.  பைடன் தனக்கு வாக்களித்தவர்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் ஜனாதிபதியாக செயற்படுவேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.