-குடந்தையான்
தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பை அடைவதற்கு பாரதிய ஜனதா கட்சி, வித்திட்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திராவிடத்தை முன்னிறுத்தி, தமிழகத்தில் ஆட்சி, அதிகார அரசியல் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றத்தை ஏற்படுத்த இந்துத்துவா சித்தாந்தத்தை முதன்மைக் கொள்கையாக கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய 'கைப்பாவையாக’ இயங்கும் ஆளும் அ.தி.மு.க அரசின் உதவியுடன் அரசியல் நோக்கம் கொண்ட 'வேல் யாத்திரையை ' நடத்துவதற்கு திட்மிட்டிருந்தது.

இந்த வேல் யாத்திரை மூலம் தமிழக வாக்காளர்களிடம் ஊறிப் போய்க் கிடக்கும் 'தி.மு.க. –அ.தி.மு.க.' என்ற இரட்டை நிலைப்பாட்டை மாற்றி, பா.ஜ.க.வின் 'தாமரை'யை மலர வைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் நாத்திகமும், பகுத்தறிவும், மத நல்லிணக்கமும் பாரிய அளவில் இருக்கும் இந்த தமிழக மண்ணில், மத ரீதியிலான பிளவை ஏற்படுத்தும் பா.ஜ.க.வின் இந்த முயற்சிக்கு ஆதரவு கிடைக்காது என்று ஒரு பிரிவினர் கூறியிருந்தனர்.
மோடி மீதான நம்பிக்கை, தமிழகத்தில் வாழும் இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சி, மாற்றங்களை நோக்கிய பயணத்தின் முதல் படியாக பல கோணங்களில் இந்த வேல் யாத்திரையை மக்கள் ஆதரிப்பார்கள் என்று மற்றொரு பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
முன்னதாகவே இந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று மாநில உளவுத்துறை பொலிஸார் அரசிற்கு இரகசிய சுற்றறிக்கையை அனுப்பி யிருந்தார்கள். அதில் இந்த வேல் யாத்திரை திருத்தணியில் தொடங்கி தமிழகத்தின் வட மாவட்டங்களில் பயணிக்கும்போது அப்பகுதிகளில் வலிமையாக இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இந்த யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களிலும், சட்ட ஒழுங்கு சீர் குலைப்பதிலும் ஈடுபடுவார்கள். இதனால் அரசுக்கும், அ.தி.மு.க.விற்கும் அவப்பெயர் ஏற்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்
ஆனால் பா.ஜ.க. வோ திட்டமிட்டபடி வேல் யாத்திரையை நடத்தி மனுஸ்மிருதி குறித்து விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்த கருத்தையும், அதற்கு தி.மு.க. துணைபோகும் விடயத்தையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, இந்துக்களின் மனதை தமக்கு வாக்களிக்கும் வகையில் வசப்படுத்த வேண்டும் என்ற திட்டத்தினையும் வகுத்திருந்தது.
இதனிடையே பா.ஜ.க.வின் இந்த வேல் யாத்திரைக்கு தமிழக பா.ஜ.க.விலுள்ள சிலர் எதிர்ப்பும், அதிருப்தியும் வெளியிட்டிருந்தார்கள் வட இந்திய வாக்காளர்கள் மத்தியில் இந்து, முஸ்லிம் என்ற மத ரீதியிலான பிரிவினை மற்றும் அது தொடர்பான உணர்ச்சிகரமான பேச்சு எடுபடும். இதற்காக அத்வானி மேற்கொண்ட ரத யாத்திரையால் வெற்றியும் கிட்டியது.
ஆனால் அதே மூலோபாயம் தென்னிந்திய மாநிலங்களுக்கு பொருந்தாது. இதற்கு முன் அமித்ஷா கேரளாவில் 'ஜனரக்சா' என்ற யாத்திரை நடத்தினார். அதனால் பா.ஜ.க. அரசியல் ரீதியாக எந்த பலனையும் இதுவரை பெறவில்லை. ஆந்திராவிலும் பா.ஜ.க. யாத்திரை மேற்கொண்டது. அதுவும் பலனளிக்கவில்லை. அதே தருணத்தில் பா.ஜ.க.விற்கு கை கொடுக்கும் அளவிற்கு தமிழகத்தில் மத துவேசமும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
அதுமட்டுமன்றி பா.ஜ.க. தலைவர் முருகன் மேற்கொள்ளும் இந்த வேல் யாத்திரையால் அரசியல் ரீதியாக பா.ஜ.க.விற்கு எந்த ஒரு பல னையும் கிடைப்பதற்கு வழிசமைக்காது. தமிழகத்தில் மத நல்லிணக்கம், அறிவார்ந்த சமூகம், அத்துடன் சாதி சார்ந்த அரசியல் தான் வலிமையாக வேரூன்றியிருக்கிறது. அதனை மையப்படுத்தி இந்த வேல் யாத்திரை தொடங்கப்படாததால் பா.ஜ.க.வின் தலைமை நினைக்கும் எந்த விளைவும் தமிழகத்தில் ஏற்படாது என்றும் உறுதியாக தெரிவித்து விட்டார்கள்.
இதேவேளை, இந்த வேல் யாத்திரையில் தமிழகத்திலுள்ள பா.ஜ.க.வின் முன்னணி தலைவர்கள் யாரும் பங்குபற்ற வேண்டாம் என்று பா.ஜ.க. தலைமை வாய்மொழியாக உத்தரவிட்டிருப்பதன் பின்னணியும் மர்மமாக இருந்தது. இத்தகைய நிலையில் தமிழகத்தில் உள்ள முருகனின் அறுபடை தலங்களில் ஒன்றான திருத்தணியில் கடந்த 6ஆம் திகதி வேல் யாத்திரை ஆரம்பிக்கமுயற்சிகள் எடுக்கப்பட்டன.
இந்த முயற்சி வெற்றி அளித்திருந்தால் வேல் யாத்திரை பழனி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களுக்குப் பயணித்து, டிசம்பர் ஆறாம் திகதியன்று திருச்செந்தூரில் நிறைவடையச் செய்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருந்தது.

துரதிஷ்டவசமாக திருத்தணியில் வேல் யாத்திரையை ஆரம்பிக்கச் முயன்றபோது பா.ஜ.க. மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
அங்கு மின்சாரம் இல்லாதிருந்தமையால் ஆத்திரமடைந்த பா.ஜ.க.வினர் கண்டன கோஷம் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்திய பொலிஸார், ஏனைய பல இடங்களிலும் வேல் யாத்திரையில் பங்கேற்க முனைந்தவர்கள் உட்பட பலர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் பா.ஜ.க.திட்டமிட்படி வேல்யாத்திரையை முன்னெடுக்க முடிந்திருக்கவில்லை.
இதேவேளை இந்த வேல் யாத்திரைக்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சி 'ஏர் கலப்பை' யாத்திரையை அறிவித்திருப்பது, வெகுஜன மக்களையும் குறிப்பாக விவசாயிகளை கவர்ந்திருக்கிறது. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டங்களுக்கு காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் வலிமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் ஏர்கலப்பை பயணத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பால், தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் இந்த பயணத்தின் இறுதி நாளன்று நடைபெறும் பொது கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்குபற்றவிருப்பதால் வேல் யாத்திரைக்கு சரியான போட்டியாக இந்த ஏர்கலப்பை யாத்திரை இருக்கவுள்ளது.
வேல் யாத்திரை வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் வலிமையாக ஆட்சி செய்து கொண்டிருந்த இடதுசாரிகளை முழுமையாக அசைத்து, அழித்து பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது போல், தமிழகத்திலும் பா.ஜ.க. இந்த முறை ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு விஸ்வரூபமாக வளர்ச்சி பெறும் என்ற எதிர்பார்ப்பு அத்தரப்பினருக்கு தற்போதும் கூட இல்லாமில்லை.
மத்திய அரசின் நெருக்கடியால் அ.தி.மு.க அரசு வேல்யாத்திரைக்கு அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் அதற்கான அனுமதியை வழங்காமை ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. எவ்வாறாயினும் வேல் யாத்திரை குழப்பிவிட்டது. அடுத்து ஏர் கலப்பை யாத்திரை. அதுக்கு என்னவாகும் என்று கூறமுடியாது.
ஆகவே தமிழகத்தில் நடைபெறப்போகும் யாத்தி ரைகள், தமிழ் தேசிய வாதத்திற்கும், இந்திய தேசிய வாதத்திற்கும் இடையேயான வெளிப்பாடாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM