-ஹரிகரன்

“குவாட் பொருளாதார மறுமலர்ச்சியை நோக்கமாகக் கொண்டிருந்தால், எந்த பிரச்சினையும் இல்லை.  அது ஒரு தனித்துவமான இராணுவ கூட்டணியாக எழுந்து வருகிறது. அதுவே பிரச்சினையாக இருக்கிறது.“ என்று கூறியிருந்தார் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே.

கடந்த 29ஆம் திகதி- அதாவது அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வந்து சென்ற மறுநாளே, அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

ஷில்லாங்கை தளமாக கொண்ட, Asian Confluence என்ற சிந்தனைக் குழாமின் ஏற்பாட்டில், “இந்திய- இலங்கை உறவுகளை ஆழப்படுத்தல்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட மெய்நிகர் கலந்துரையாடலிலேயே அட்மிரல் கொலம்பகே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசியல் மூலோபாய வல்லுனர்களுடன் நடத்தப்பட்ட அந்த மெய்நிகர் கலந்துரையாடலில்,  இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அட்மிரல் கொலம்பகே, சீன வெளியுறவு அமைச்சரைப் போலவே- அவரது விம்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், கருத்து வெளியிட்டிருந்தார்.

குவாட் ஒரு தனித்துவமான இராணுவ கூட்டணியாக எழுந்து வருகிறது, என்றும்,  அதுதான் பிரச்சினையாக உள்ளது என்றும் அவர் கூறிய கருத்து,நிச்சயமாக சீனாவின் கருத்தையே- அல்லது அதன் பார்வையைத் தான் பிரதிபலிக்கிறது.

அதற்காக, குவாட் ஒன்றும், இராணுவக் கூட்டணி கிடையாது, அது பாதுகாப்பு நலன்களை அடிப்படையாக கொண்டதல்ல என்று யாரும் வாதிட முடியாது. இலங்கை அதனை எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறது- பிரதிபலித்திருக்கிறது என்பது தான் கவனிக்க வேண்டிய விடயம்.

ஜனாதிபதி - மைக் பொம்பியோ சந்திப்பு

அண்மையில் கொழும்பு வந்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ வைச் சந்தித்துப் பேசிய போது, சீனா பொருளாதார ரீதியாக இலங்கையை சுரண்டுகிறது, என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அதனை நிராகரித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, சீனா அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும், கடன்பொறியில் சிக்க வைக்கவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

அங்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ, சீனாவின் கருத்தையே பிரதிபலித்திருந்தார்.

அதுபோலத் தான், குவாட் ஒரு இராணுவக் கூட்டணியாக மாறுகிறது என்றும், அதுவே பிரச்சினை என்றும், வெளியுறவு அமைச்சர் அட்மிரல் கொலம்பகேயும் குறிப்பிட்டிருக்கிறார்.

குவாட் ஒரு இராணுவக் கூட்டணியாக மாறுவது இலங்கைக்கு எங்கே சிக்கலை ஏற்படுத்துகிறது?

குவாட்  சீனாவை மையப்படுத்தி நகர்வுகளை முன்னெடுக்கும் போது தான் இலங்கையை, அச்சம் கொள்ள வைக்கிறது.

வேறு எந்த வகையிலும் குவாட் இலங்கைக்கு அச்சத்தையோ அச்சுறுத்தலையே ஏற்படுத்தவில்லை. இந்தியப் பெருங்கடலில், சீனா பெருமெடுப்பில் தனது தலையீடுகளைச் செய்து செல்வாக்கை அதிகரித்து வருகிறது.

அந்த தலையீடு இராணுவ ரீதியாக மாத்திரமன்றி பொருளாதார ரீதியான தலையீடாகவும் இருந்து வருகிறது. இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இவ்வாறு சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கின்றன.

இதுதான், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளை ஒன்றிணைய வைத்திருக்கிறது.

2007ஆம் ஆண்டிலேயே குவாட் அமைப்பு உருவாக்கப்பட்ட போதும், அப்போது அதிகம் கவனத்தை பெறவில்லை. இப்போது அது உலக அரசியல் ஒழுங்கில் முக்கியமானதொரு நகர்வாக பார்க்கப்படுகிறது,

பி.ஆர்.ஐ எனப்படும் சீனாவின் நவீன பட்டுப்பாதை திட்டமும், அமெரிக்காவின் இந்தோ- பசுபிக் மூலோபாயமும் மோதிக் கொண்டிருக்கின்ற சூழலில் தான், குவாட் ஒரு தனித்துவமான அணியாக எழுச்சிபெற ஆரம்பித்திருக்கிறது.

இது இந்தோ- பசுபிக் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கை உடைப்பதற்காக, முன்னெடுக்கப்படக் கூடிய ஒரு நகர்வு தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த அணி பலமடைந்து, சீனாவுடன் முட்டி மோதிக் கொள்ளும் நிலை ஏற்படுவதை இலங்கை விரும்பவில்லை.

ஏனென்றால், பொருளாதார ரீதியாக சீனாவிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது இலங்கை. 

சீனாவின் கொலனி அல்லது கொல்லைப் புறம் என்று விமர்சிக்கபப்டும் அளவுக்கு இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இருக்கின்றன.

இவ்வாறான நிலையில், குவாட் அதற்கு சிக்கலை ஏற்படுத்தி விடுமோ என்ற பீதி, கொழும்புக்கு ஏற்பட்டிருக்கிறது.

சீனாவின் பி.ஆர்.ஐ  எனப்படும் பட்டுப்பாதை திட்டம், ஒரு இராணுவ நோக்கிலானது என்றும், பொருளாதார மறுமலர்ச்சி என்ற பெயரில், சீனா தனது இராணுவத் தளங்களை அமைப்பதற்கு வழிவகுக்கிறது என்றும், மேற்குலக நாடுகளால் கடுமையாக விமர்ச்சிக்கப்படுகிறது.

இதனை சீனா மறுத்தே வருகிறது.

ஆனாலும், சீனாவின் இந்த பி.ஆர்.ஐ  திட்டத்தை இலங்கை சந்தேகிக்கவில்லை. அதனை ஒரு பொருளாதார திட்டமாக மட்டும் பார்க்கிறது, இராணுவ நோக்கம் பற்றி கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், குவாட் அமைப்பை இலங்கை சந்தேகிக்கிறது. அது தனித்துவமான இராணுவக் கூட்டணியாக மாறுவதாக அச்சம் கொள்கிறது.

குவாட் பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஒரு திட்டமாக இருந்தால் பரவாயில்லை என்று கூறும் இலங்கை, ஏன் சீனாவின் பி.ஆர்.ஐ  திட்டத்தை அவ்வாறு நோக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.

குவாட் பற்றி பலமான சந்தேகங்களை இலங்கை எழுப்பியுள்ள நிலையில் தான், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் வங்காள விரிகுடாவில் மலபார் கூட்டுப் பயிற்சியை ஆரம்பித்திருக்கின்றன.

India, Japan, US To Hold Malabar Naval Exercise In Bay Of Bengal - DefPost

இதன் முதற்கட்டம் விசாகப்பட்டினத்துக்கு அப்பால், நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாவது கட்டம் வரும் 17ஆம் திகதி அரபிக் கடலில் தொடங்கவுள்ளது.

இந்தக் கூட்டுப் பயிற்சி சீனாவுக்கு சவால் விடும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இலங்கையும் கூட இந்தக் கூட்டுப் பயிற்சியை வரவேற்கவில்லை. இந்தியாவுடன் இணைந்து செயற்பட்டாலும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்று கருதினாலும், சீனாவுடன் இணைந்திருப்பதையே இலங்கை விரும்புகிறது.

இந்தியாவை பகைத்துக் கொள்வதில்லை, அதன் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டின் மூலமும், அதேவேளை சீனாவுடன் இணைந்திருப்பதன் மூலமும் தான் வெளியுறவுக் கொள்கையில் சமனிலையை பேண முற்படுகிறது இலங்கை.

இதற்குள் அமெரிக்காவை உள்ளே அனுமதிக்க இலங்கை தயாராக இல்லை. ஆனால், சர்வதேச நடப்பு அவ்வாறான ஒன்றாகத் தெரியவில்லை.

மெய்நிக் கருத்தரங்கில் உரையாற்றிய அட்மிரல் கொலம்பகே வெளியிட்ட ஒரு தகவலே அதற்கு சான்று.

“நான் ஆட்சியில் இருக்கும் வரை, இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு தீங்கு விளைவிக்க ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ , அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவிடம் திட்டவட்டமாக கூறியிருந்தார்” என அவர் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதன் அர்த்தம் என்ன?  இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை அச்சுறுத்தலை ஏற்படுத்த முனைகிறது என்ற குற்றச்சாட்டை பொம்பியோ முன்வைத்திருக்கிறார். 

அல்லது இன்னொரு விதமாக கூறுவதானால், சீனாவை அரவணைத்து, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.

அதாவது, இந்தியாவின் பாதுகாப்பை முன்னிறுத்தியே இலங்கைக்கு “செக்” வைக்க முயன்றிருக்கிறார் பொம்பியோ.

ஆனாலும் அதற்குள் அகப்படாமல் விலகியிருக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ. எவ்வாறாயினும், அவரது இந்த வாக்குறுதியை அமெரிக்க நம்பி விடும் என்று எதிர்பார்க்க முடியாது.

அதுபோல,தமது இந்த வாக்குறுதியை அமெரிக்காவும் நம்பாது என்பது கோட்டாபய ராஜபக் ஷவுக்கும் தெரியாமல் இருக்காது.

ஏனென்றால், இதே வாக்குறுதியை முன்னர் தான் கொடுத்த போது, இந்தியா நம்பவில்லை என்று, 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அவர் கூறிக் கொண்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.