“அரசியல் என்பது இராஜதந்திரம் தான். அதில் காய்களை நகர்த்துவது இலகுவானதல்ல. சரியான தருணத்தில் சரியான முறையில் நகர்வுகள் இருக்க வேண்டும். பசில் ராஜபக்ஷவை பொறுத்தவரையில் அதனை சிறப்பாக செய்யக் கூடியவர்”

-சத்ரியன்

பாராளுமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை இரண்டு மணித்தியாலங்கள் கூடவிருந்த போது,  பசில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் உறுப்பினராகப் பதவியேற்கப் போகிறார் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால், எதிர்பார்க்கப்பட்டது போன்று, அவர் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்கவில்லை. அதற்காக அவர், பாராளுமன்றத்துக்குச் செல்லப் போவதில்லை என்று அர்த்தமில்லை.

எந்தநேரத்திலும் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்குள் பிரவேசிக்கலாம். ஆனால் அது எப்போது என்பது தான் கேள்விக்குரிய விடயமாக உள்ளது.

20 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதன் மிகமுக்கியமான நோக்கங்களில் ஒன்று,  பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றத்துக்குள் கொண்டு வருவதற்கான தடையை நீக்குவதேயாகும்.

இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு- பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதற்கு 19 ஆவது திருத்தச் சட்டம் தடையை ஏற்படுத்தி இருந்தது.

அந்தத் தடையை 20 ஆவது திருத்தச் சட்டம் நீக்கியிருக்கிறது.

20 ஆவது திருத்தச் சட்டத்தின் ஏனைய பிரிவுகளைப் போலன்றி,  குழு நிலை விவாதத்தில், இதற்கு தனியாக வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

அப்போது, இரட்டை குடியுரிமை தடை நீக்கத்துக்கு 157 வாக்குகள் ஆதரவாக கிடைத்திருந்தன.ஆனால் 20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு கிடைத்தது 156 வாக்குகள் தான்.

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் 19 ஆவது திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது,  அதற்கு ஆதரவளித்தவர்கள் தான், இப்போதும் அதனை மீளக்கொண்டு வருவதற்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள்.

பசில் ராஜபக்ஷவுக்காகவே, இந்த திருத்தம் கொண்டு வரப்பட்ட நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்கமாட்டார் என்று நம்பிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.

இந்தக் கட்டத்தில் அவர் ஏன் பதவி ஏற்க தயங்குகிறார்?

20 ஆவது திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்ட உடன் பதவியேற்றால்,  இது ராஜபக்ஷ குடும்பத்திற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்பது நிரூபணமாகி விடும்.

அவ்வாறான ஒரு விம்பம் உருவாவதை தடுப்பதற்காகவே அவர் சற்று தாமதிக்கிறாரே தவிர,  பாராளுமன்றம் வருவதற்கு விருப்பமின்றி, தாமதிப்பதாக தெரியவில்லை.

ஜயந்த கோத்தாகொட தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டதே, பசில் ராஜபக்ஷவுக்கு விட்டுக் கொடுப்பதற்காகத் தான். அவர் ஒரு பசிலின் தீவிர விசுவாசி.

20 ஆவது திருத்தச் சட்ட விவாதத்தின் போது, இரட்டைக் குடியுரிமை பற்றிய திருத்தங்களை கடுமையாக எதிர்த்த அமைச்சர் விமல் வீரவன்சவைக் கூட, அவர் பாராளுமன்றத்துக்குள் தாக்குவதற்கு முயற்சி செய்திருந்தார்.

அவ்வாறான ஒருவர், பசில் ராஜபக்ஷவுக்காக தனது பதவியை விட்டு விலகுவதற்கு ஒரு கணமும் யோசிக்கமாட்டார்.

அவ்வாறு யோசிப்பவராக இருந்தால், இரட்டைக் குடியுரிமை திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருப்பார் அல்லது அதனை எதிர்த்திருப்பார்.

இந்த திருத்தம் நிறைவேறினால் தனது எம்.பி பதவிக்கு ஆபத்து என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்த விடயம் தான்.

எனவே, அவர் விலகுவதற்கு இழுத்தடிப்பதால் தான், பசில் ராஜபக்ஷ பதவியேற்பதில் இழுபறி என்று கருத முடியாது.

அதேவேளை, பசில் ராஜபக்ஷ அவசரப்பட்டு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொள்வதை தவிர்த்துக் கொள்ள விரும்புகிறார் போலவே தெரிகிறது.

ஏனென்றால், அது ராஜபக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரான விமர்சனங்களை இன்னும் மோசமாக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

அதைவிட, முன்னர் இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள் பாராளுமன்றம் வருவதை எதிர்த்த,  எதிரணி வரிசையில் இருப்பவர்கள் கூட, இப்போது, பசில் ராஜபக்ஷவின் வருகைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

உதாரணத்துக்கு முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணனைக் குறிப்பிடலாம். அவர் பசில் பாராளுமன்றம் வருவதை வரவேற்பதாக கூறியிருக்கிறார்.

அதுபோல, 20 ஆவது திருத்தத்தை எதிர்த்த போதும், இரட்டைக் கடியுரிமை சரத்தை ஆதரித்து வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட  உறுப்பினர் முஷாரப் தனது முடிவுக்கு ஒரு காரணத்தை முன்வைத்திருந்தார்.

முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கு நிலைப்பாடு கொண்ட இனவாதிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றவர்கள் இரட்டைக் குடியுரிமை சரத்தை கடுமையாக எதிர்க்கின்ற போது, அவர்களுடன் மல்லுக்கட்டக் கூடிய பசில் ராஜபக்ஷவை உள்ளே வர அனுமதிப்பது சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

அதாவது “எதிரியின், எதிரியை ஆதரித்தல்” என்பது அவரது நிலைப்பாடு.

எதிரியை எதிர்ப்பவரை ஆதரிப்பதன் மூலம், அவரை கவசமாகப் பயன்படுத்திக் கொண்டு, தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது, அவரது உத்தியாக இருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த பேரினவாதிகள் அடக்குமுறைகளை திணிக்க முனையும் போது, அவ்வாறானவர்களால் எதிர்க்கப்படுபவரை பலப்படுத்துவது உசிதமானதென முஷாரப் கருதுகிறார்.

இது சரியா- தவறா என்பது அவரவர் பார்வையைப் பொறுத்த விடயம்.

ஆனால், 20 ஆவது திருத்தச் சட்ட விடயத்தில், அரசாங்கத்துக்குள் மூன்று அணிகள் இருப்பது மட்டும் அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது.

ஜனாதிபதி கோட்டாவின் அணி, பிரதமர் மஹிந்தவின் அணி, பசில் ராஜபக்ஷவின் அணி. இந்த மூவரும் தமக்கென தீவிர விசுவாசிகளைக் கொண்ட அணிகளை வைத்திருக்கிறார்கள். 

அதுபோல, தமக்குள் ஒத்துப் போகக் கூடியவர்களைக் கொண்ட அணிகளையும் கொண்டிருக்கிறார்கள்.

அதேவேளை, ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போகாத - ஒத்துப்போக விரும்பாக அணிகளையும் கொண்டிருக்கிறார்கள். அரசியல் என்பது இராஜதந்திரம் தான். அதில் காய்களை நகர்த்துவது இலகுவானதல்ல.

சரியான தருணத்தில் சரியான முறையில் அதனை செய்ய வேண்டும். பசில் ராஜபக்ஷவை பொறுத்தவரையில் அதனை சிறப்பாக செய்யக் கூடியவர்.

இல்லாவிட்டால், ஒரு புதிய கட்சியை உருவாக்கி நான்கு ஆண்டுகளுக்குள் ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் வெற்றி பெற்றிருக்க முடியாது.

அரசாங்கத்துக்குள் மூன்று தரப்புகள் இருக்கும் நிலையில், சூட்சுமமாக காய்களை நகர்த்தக் கூடிய பசில் ராஜபக்ஷவின் உள்நுழைவு, ஒருவரை ஒருவர் அச்சத்துடன் பார்க்கின்ற நிலையை ஏற்படுத்தலாம்.

அரசாங்கத்துக்குள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இருக்கும் மூவருக்குள்ளேயும், தனிப்பட்ட முறையில் பகைமை, புகைச்சல்கள் இருக்கிறதோ இல்லயோ, இவர்கள் ஒவ்வொருவரைச் சுற்றியும் இருப்பவர்கள் மத்தியில் கோபங்கள், குரோதங்கள், முரண்பாடுகள் இருக்கின்றன.

இவ்வாறான அணிகள் எப்போதுமே, ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியலுக்கு சவாலானவையாகத் தான் இருக்கும்.